புதிய தனியார் விண்வெளி ஆய்வு மையம் - அமேசான் நிறுவனர் பெசோஸ் திட்டம்

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான புளு ஆரிஜின், வர்த்தக ரீதியிலான விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை கட்டமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது.
புதிய தனியார் விண்வெளி ஆய்வு மையம் - அமேசான் நிறுவனர் பெசோஸ் திட்டம்
x
அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான புளு ஆரிஜின், வர்த்தக ரீதியிலான விண்வெளி ஆய்வு மையம் ஒன்றை கட்டமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது. 

உலக பணக்காரர்களால் தொடங்கப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ், புளு ஆரிஜின், வெர்ஜின் கேலடிக் ஆகிய தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனங்கள், மனிதர்களை விண்வெளிக்கு சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டத்தில் ஏற்கனவே வெற்றிக்கனியை பறித்துவிட்டன. 

தற்போது அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் விண்வெளி ஆய்வு நிறுவனமான புளு ஆரிஜின் விண்வெளியில் மற்றொரு மைல் கல்லை எட்ட துடிப்புடன் களமிறங்கியிருக்கிறது.

ஆம், வர்த்தக ரீதியிலான விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைக்கும் திட்டத்தை புளு ஆர்ஜின் வெளியிட்டுள்ளது.

விண்வெளியில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உள்பட 13 நாடுகள் இணைந்து கட்டமைத்தது. 

இதற்கு போட்டியாகவும், விண்வெளியில் ஆய்வில் தன்னிறைவை பெறவும் சீனா, தனக்கென புதிதாக ஒரு விண்வெளி நிலையத்தை கட்டமைத்து வருகிறது. 

தற்போது தனியார் நிறுவனமான புளு ஆரிஜின், இவ்வரிசையில் இணைந்திருக்கிறது. 

தாங்கள் கட்டமைக்கும் விண்வெளி ஆய்வு மையத்திற்கு ஆர்பிட்டல் ரீஃப் Orbital Reef எனப் பெயரிட்டிருப்பதாக கூறியிருக்கும் புளூ ஆர்ஜின் நிறுவனம், இந்த புதிய விண்வெளி ஆய்வு மையம் 2030 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என அறிவித்துள்ளது.

சியரா ஸ்பேஸ் மற்றும் போயிங் நிறுவனத்துடன் இணைந்து 32 ஆயிரம் சதுர அடியில் தாங்கள் கட்டமைக்கும் விண்வெளி ஆய்வு மையம் ஒரு வணிக பூங்காவாக இருக்கும் என்றும் அதில் 10 பேர் வரையில் தங்கியிருக்கலாம் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விண்வெளி குறித்த திரைப்படங்களை எடுக்கவும், விண்வெளி ஆராய்ச்சியை மேற்கொள்ளவும் தங்களுடைய ஆய்வு மையம் உகந்த இடமாக இருக்கும் என்றும் அதில் ஒரு விண்வெளி ஹோட்டலையும் கொண்டிருக்கும் என்றும் புளூ ஆரிஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய புளூ ஆர்ஜின் மற்றும் சியரா ஸ்பேஸ் நிறுவன அதிகாரிகள், விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைக்க ஏற்படும் செலவு குறித்த மதிப்பை தெரிவிக்க மறுத்துவிட்டனர். 

ஆனால் இத்திட்டத்திற்காக பெருமளவு நிதியை வழங்க அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் உறுதியளித்துள்ளார். அவர் புளூ ஆரிஜின் விண்வெளி ஆய்வு நிறுவனத்திற்காக ஒரு ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலரை, அதாவது இந்திய ரூபாயில் மதிப்பில் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

20 ஆண்டுகள் பழமையான சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை மாற்றுவதற்கான ஒரு திட்டத்தை நாசா தேடும் நிலையில் புளூ ஆரிஜின் நிறுவனத்திடம் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திட்டப்படி ஆர்பிட்டல் ரீஃப் விண்வெளி ஆய்வு மையம் கட்டமைக்கப்பட்டால், விண்வெளியில் முதல் தனியார் விண்வெளி ஆய்வு மையத்தை கட்டமைத்த நிறுவனம் என்ற பெருமையை, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோசின் புளு ஆரிஜின் நிறுவனம் பெறும்.

Next Story

மேலும் செய்திகள்