துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலி

துருக்கி நாட்டின் ஏஜியன் கடல்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் கட்டடங்கள் தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலியாகி உள்ளனர்.
துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - இடிபாடுகளில் சிக்கி 17 பேர் பலி
x
மேற்கு ஆசிய நாடான துருக்கியின் மேற்குப் பகுதியில் உள்ளது ஏஜியன் கடல். துருக்கி நேரப்படி, நேற்று காலை வரை ஏஜியன் கடல் வழக்கம்போல் அமைதியாகத்தான் இருந்தது. ஆனால், மதியம் 3 மணி அளவில் ஏஜியன் கடல் கொந்தளிக்க ஆரம்பித்தது.  ஏஜியன் கடலுக்கடியில்16 கிலோ மீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதே இதற்கு காரணம். இதன் விளைவாக, ஏஜியன் கடலை ஒட்டி அமைந்துள்ள இஸ்மிர் மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

 இந்த பயங்கர நிலநடுக்கத்தால்  கட்டடங்கள் சீட்டுக்கட்டுபோல சரிந்து நொடிப்பொழுதில் தரைமட்டமாகின. என்ன நடக்கிறது என்று செய்வதறியாது திகைத்த மக்கள், மரண பயத்துடன் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
இதனிடையே, கடலில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் விளைவாக இஸ்மிர் மாகாணத்துக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அங்குள்ள செவர்சியர் நகரில் சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டது.  துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்து உள்ளது. 

 சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கியவர்களை, போர்க்கால அடிப்படையில் மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். நள்ளிரவிலும் மீட்புப்பணியை அவர்கள் தொடர்ந்தனர். மேலும் ஏராளமானோர் இடிபாடுகளில் சிக்கி உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. 

ஏஜியன் கடல்பகுதியில் ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் துருக்கியின் அண்டை நாடான கிரீசையும் விட்டுவைக்கவில்லை.  கிரீஸின் ஆளுகைக்கு உட்பட்ட சமோஸ் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன. மேலும் அங்கு சிறிய அளவிலான சுனாமி ஏற்பட்டு கடல்நீர் புகுந்தது. ஆப்கானிஸ்தானிலும் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் காபுலின் வடகிழக்குப் பகுதியில் 4 புள்ளி 2 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்து உள்ளது.

துருக்கி மற்றும் கிரீஸ் நாட்டில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் இரு நாட்டு மக்களும் அச்சத்தில் உறைந்து உள்ளனர். சமீப காலமாக இரு நாடுகளும் மத்திய தரைக்கடல் பகுதியில் எண்ணெய் எடுப்பதற்கு போட்டா-போட்டி போட்டு வந்த நிலையில், இயற்கையின் ருத்ரதாண்டவமான நிலநடுக்கம் இரு நாடுகளையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. 






Next Story

மேலும் செய்திகள்