நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் : டொனால்டு டிரம்ப் - ஜோ பைடன் இடையே கடும் மோதல்

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகளின் வேட்பாளர்கள் நேரலையில் பங்கு பெறும் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் : டொனால்டு டிரம்ப் - ஜோ பைடன் இடையே கடும் மோதல்
x
அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறுகிறது என்றால், அது உலகம் முழுவதும் கவனிக்கப்படும்.  தேர்தல் பிரச்சாரத்தின் போது, இருகட்சிகளின் வேட்பாளர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் நேருக்கு நேர் பங்கு பெறும் விவாத நிகழ்ச்சி, கடந்த காலங்களில் பெரும் வெற்றியை தேடித்தந்துள்ளன.

1960இல் கென்னடி மற்றும் ரிச்சட் நிக்சன் இடையே முதன் முதலில் நடந்த தொலைக்காட்சி விவாதத்தை, 6.6 கோடி அமெரிக்கர்கள் நேரலையில் பார்த்தனர். இதில் கென்னடி மிகச் சிறப்பாக பேசி, தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பிறகு 16 ஆண்டுகள் கழித்து 1976இல் ஜனாதிபதியாக இருந்த ஜெரால்ட் போர்ட்டுக்கும், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜிம்மி கார்டருக்கும் நடந்த தொலைகாட்சி விவாதத்தை 6.9 கோடி பேர் பார்த்தனர். 

1980 தேர்தலின் போது ரொனாலட் ரீகனுக்கும், ஜிம்மி கார்ட்டருக்கும் இடையே நடந்த தொலைகாட்சி விவாதங்களை சுமார் 8 கோடி அமெரிக்கர்கள் பார்த்தனர். இதில் சிறப்பாக பேசிய ரீகன், தேர்தலில் வெற்றி பெற்றார்.1992 தேர்தலில் ராஸ் பெரோ என்ற தொழிலதிபர் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த தேர்தலில் மட்டும் தான் மூன்று வேட்பாளர்கள் கொண்ட தொலைகாட்சி விவாதங்கள் நடை பெற்றன. 

அன்றைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ், ஜனாயக கட்சியை சேர்ந்த பில் கிளிண்டன் மற்றும் ராஸ் பெரோ ஆகிய மூன்று வேட்பாளர்களும் கலந்து கொண்ட தொலைக்காட்சி விவாதத்தை, சுமார் 7 கோடி அமெரிக்கர்கள் பார்த்தனர். இதில் சிறப்பாக பேசிய பில் கிளிண்டன் வெற்றி பெற்றார்.2008 தேர்தலில்,  அப்போது குடியரசுக்கு கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சாரா பாலினுக்கும்,  ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடனுக்கும் நடந்த தொலைகாட்சி விவாதத்தில், அமெரிக்க பொருளாதாரம் மற்றும் ஈராக் போர் பற்றி கடுமையான வாக்குவாதம் நடந்தது.

2016 தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப்பிற்கும் நடந்த முதல் தொலைகாட்சி விவாதத்தை 8.4 கோடி அமெரிக்கர்கள் பார்த்தனர். இணையத்தின் மூலம் மேலும் பல கோடி பேர் பார்த்தனர். அமெரிக்க தேர்தல் வரலாற்றில் மிக அதிக பார்வையாளர்களை கொண்ட தொலைகாட்சி விவாதம் இது தான்.இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள முதல் தொலைக்காட்சி விவாதத்தில் டிரம்ப் மற்றும் ஜோ பிடன் கலந்து கொள்ள உள்ளனர்.  டிரம்ப்பின் ஆக்ரோசமான தாக்குதல்களை ஜோ பிடன் வெற்றிகரமாக சமாளிப்பாரா என்பதை பொறுத்தே, வெற்றி வாய்ப்புகள் இருக்கும் என்று கருதப்படுகிறது.

"10 ஆண்டுகளாக டிரம்ப் வருமான வரி செலுத்தவில்லை" - அமெரிக்க இதழில் வெளியான தகவலால் சர்ச்சை

பத்து ஆண்டுகளாக வருமான வரி செலுத்தவில்லை என்று வெளியான தகவலால் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதையை அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.கடந்த 15 ஆண்டுகளில் 10 ஆண்டுகளுக்கு அவர் வருமான வரி செலுத்தவில்லை என்ற தகவல் நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியானதில் இருந்து அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. டிரம்ப் அதிபராக பதவியேற்ற காலகட்டத்தில் 750 அமெரிக்க டாலர்கள் வருமான வரி செலுத்தியிருக்கிறார். அதற்கு முன்பும் பின்பும் வருமான வரி செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இதனை டிரம்ப் திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஐஆர்எஸ் எனப்படும் ஆடிட்டிங் முடிந்தவுடன் தாம் வருமான வரி செலுத்தியதற்கான படிவங்களை வெளியிட தயார் என்று அவர் கூறியுள்ளார். ஆனால் அவர் வருமான வரி படிவங்களை வெளியிட ஐஆர் எஸ் ஆடிட்டிங் முடிந்திருக்க வேண்டும் என்று அவசியமில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க வருமான வரித்துறைக்கு அவர் தாக்கல் செய்துள்ள படிவங்களில் தமது நிறுவனங்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்திருப்பதாக அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தீவிர பிரசாரம் - ஜோபிடன் முன்னணியில் உள்ளதாக தகவல் 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் ஜோபிடன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு தொடர்ந்து முன்னணியில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 80 மில்லியன் அமெரிக்க மக்கள் தங்கள் வாக்குகளை தபால் மூலம் செலுத்த கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதில் முறைகேடு நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப் இதற்கு உச்சநீதிமன்றத்தால்தான் தீர்வு காண முடியும் என்றும் தெரிவித்துள்ளார். 

"ஜோபிடனுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும்" - அமெரிக்க அதிபர் டிரம்ப்  ட்வீட் மூலம் மீண்டும் வலியுறுத்தல்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோபிடனுக்கு ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் என்று தற்போதைய அதிபர் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.  தாமும் ஊக்க மருந்து சோதனைக்கு தயார் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.  நவம்பர் 3 ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் டிரம்பும்,  ஜோபிடனும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இருவரும் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சி இன்றிரவு நடைபெற உள்ள நிலையில், அதனை ஒத்திவைத்து ஊக்க மருந்து சோதனை நடத்த வேண்டும் என்று டிரம்ப் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

அர்மெனியா - அஜர் பைஜான் இடையே மோதல்

அர்மெனியாவுக்கும், அஜர் பைஜானுக்கும் இடையே நடைபெற்று வரும் இரண்டாம் நாள் தாக்குதலில், 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.ரஷ்ய ஆதரவு கொண்ட அர்மேனியாவும், துருக்கி ஆதரவு கொண்ட அஜர் பைஜானும் 1980 முதல் நாகோர்னா - கராபாக் பகுதியில் அடிக்கடி ராணுவ தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிறிது காலம் நின்றிருந்த தாக்குதல் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இரண்டாம் நாளாக நடந்த தாக்குதலில் குறைந்தப்பட்சம் 30 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. 

"இலங்கை - இந்திய மீனவர் பிரச்சனை" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டம்

இலங்கை - இந்திய மீனவர்களுக்கு இடையிலான பிரச்சனையை ராஜதந்திர மட்டத்தில் பேச்சு நடத்தி விரைவில் தீர்வு காண உள்ளதாக, இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா நெருக்கடி முடிந்த பின்னர் இந்தியா சென்று பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இந்த பிரச்சனை தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடனும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன், இணையவழி பேச்சுவார்த்தையை நடத்த உள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா  கூறினார்.

"மீனவர் பிரச்சனை - தமிழக அரசியல்வாதிகளே காரணம்" - இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டு

இலங்கை மற்றும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு, தமிழ்நாட்டில் உள்ள சில அரசியல் சக்திகள் காரணம் என, இலங்கை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை - இந்திய மத்திய அரசுகள் என்ன தான் பேச்சு நடத்தியிருந்தாலும், தீர்மானம் எடுத்திருந்தாலும், கடலுக்கு செல்வது மீனவர்கள் தான் என்றார். அரசாங்கம் என்ன தான் தீர்மானம் எடுத்திருந்தாலும் மீனவர் விவகாரத்தில் அவை செல்வாக்கு செலுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டில் சில அரசியல் சக்திகள் மீனவர் விவகாரத்தில், அரசியல் செய்வதால், இன்றும் அந்த பிரச்சனை தீர்க்கப்பட வில்லை என்றும் கூறினார்.

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக மஞ்சள் கடத்தல்

இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக கடல் வழியாக கடத்தி செல்லப்பட்ட 952 கிலோ மஞ்சள் கட்டிகளை, இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இந்த கடத்தலில் ஈடுபட்ட  ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், மன்னார் எருக்கலம்பிட்டி பகுதியை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. சட்டவிரோதமாக படகின் மூலம் மஞ்சள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தலுக்கு உடந்தையானவர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் இலங்கை குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். 











Next Story

மேலும் செய்திகள்