அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பிடன் வாழ்க்கை வரலாறு

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் களம் இறங்கி உள்ள ஜோ பிடன் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்
அமெரிக்க அதிபர் தேர்தல் : ஜோ பிடன் வாழ்க்கை வரலாறு
x
அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜோ பிடன்,  பென்சில்வேனியா மாநிலத்தின் ஸ்காரன்டன் நகரில் 1942 ஆம் ஆண்டு  பிறந்தார். படிப்பில் சுமாராக விளங்கினாலும், விளையாட்டு வீரராக  திகழ்ந்த‌  அவர் , சட்டக் கல்லூரியில் படித்த போது  நெய்லியா ஹன்டர் என்ற சக மாணவியை காதலித்து, திருமணம் செய்தார். டெலாவார் மாநிலம் வில்மிங்டன் நகரில் வழக்கறிஞராக  வாழ்க்கையை தொடங்கிய அவர் , 1972 ஆம் ஆண்டு  தமது 30  ஆவது வயதில், அந்த  மாநிலத்தில் இருந்து அமெரிக்க 
மேல் சபையான செனட்டுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 

தேர்தலில் வெற்றி பெற்ற , சில வாரங்களில் மனைவியும், ஒரு வயது மகளும் ஒரு சாலை விபத்தில் உயிரிழந்தனர்.  காயங்களுடன் தப்பிய இருமகன்களை வளர்ப்பதற்காக பொறுப்பு மிக்க தந்தையாக வில்மிங்டன் நகரில் தொடர்ந்து வசித்து வந்தார். 36 ஆண்டுகள் செனட் உறுப்பினராக இருந்த அவர் , தினமும் காலை ஒன்றரை  மணி நேரம் ஆம்ட்ராக் ரயில் மூலம் பயணம் செய்து  தலைநகர் வாஷிங்டன் சென்று அங்கு செனட் சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டார். மாலையில் மீண்டும் ஒன்றரை  மணி நேரம் ஆம்ட்ராக் ரயிலில் பயணத்து வீடு திரும்பவதை வழக்கமாக கொண்டிருந்தார் 

அதனால் அவருக்கு 'ஆம்ட்ராக் ஜோ' என்ற பட்டப் பெயர் உருவானது. 1975 - ஆம் ஆண்டு  டிரேசி ஜாக்கப்ஸ் என்ற கல்வியாளரை மறுமணம் செய்து கொண்டார். 2009  ஆம் ஆண்டு வரை செனட் உறுப்பினராக பணியாற்றிய ஜோ பிடன், வெளியுறவுகளுக்கான செனட் கமிட்டியின் தலைவராக பல ஆண்டுகள் பணியாற்றி, புகழ் பெற்றார். 1987 - ல்   அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும், ஜனநாயக கட்சியின் வேட்பாளாரை தேர்வு செய்யும் உள்கட்சித் தேர்தலில்  பங்கேற்று தோல்வியடைந்தார். 1988 ஆம் ஆண்டு அவருக்கு இரண்டு முறை, மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

2008  தேர்தலில், ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டு அமெரிக்க அதிபராக , பாரக் ஒபாமா தேர்வு செய்யப்பட்ட போது ஜோ பிடன் துணை அதிபரானார் . 2012 - ஆம் ஆண்டு தேர்தலிலும் அதே ஜோடி வெற்றி  பெற்றது
2016  அதிபர் தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கி இருந்த ஜோ பிடன் , வருகிற நவம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் 




Next Story

மேலும் செய்திகள்