இந்திய, சீன எல்லைப் பிரச்சனை பேச்சுவார்த்தை - "2 மணி நேர காரசார பேச்சில் நடந்தது என்ன...?"

இந்திய, சீன எல்லைப் பிரச்சனை தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையே 2 மணி நேரம் அனல் பறக்கும் வகையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
இந்திய, சீன எல்லைப் பிரச்சனை பேச்சுவார்த்தை - 2 மணி நேர காரசார பேச்சில் நடந்தது என்ன...?
x
இந்திய எல்லைப் பகுதியான கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில முக்கிய பகுதிகளில் தனது துருப்புகளை நிலை கொள்ளச் செய்ததுடன் உள்கட்டமைப்பு பணிகளையும் சீனா மேற்கொண்டது. இதனை தடுக்கச் சென்ற இந்திய வீரர்களை, கடந்த மாதம் சீன துருப்புகள் தாக்கியதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. இந்நிலையில், சீனாவின் 59  செயலிகளை தடை செய்த இந்தியா, ஐந்தாம் தலைமுறை தொலைத் தொடர்பு சோதனை முயற்சியில்  பங்கேற்க சீனாவின்  Huawei நிறுவனத்துக்கு அனுமதி மறுத்தது. இந்நிலையில், பிரச்சனையை பேசித் தீர்க்க சீனா வலியுறுத்தியதோடு, செயலிகள் மீதான இந்தியாவின் தடைக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தது. இந்நிலையில், பிரச்சனையின் தீர​ம் அதிகரிக்கவே, பிரதமர் நரேந்திர மோடி, எல்லைக்கு  சென்று ராணுவ வீரர்களை சந்தித்து பேசினார். இந்த நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி ஆகியோர் காணொலி மூலம் சுமார் 2 மணி நேரம் பேச்சு நடத்தினர். சீன துருப்புகள் உடனடியாக பின்வாங்குவதுடன், பாதுகாப்பு கட்டமைப்புகளை உடனடியாக அழிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், சீனாவின் பிடிவாதம் தொடர்ந்தால் வர்த்தக ரீதியான இந்தியாவின் நடவடிக்கை வேகமெடுக்கும் என அஜித்தோவல் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. வியட்நாம் போருக்கு பின்னர் சீனா இந்த முறை அதிக இழப்புகளை சந்தித்து உள்ள நிலையில், நேற்றைய பேச்சில் சற்று இறங்கி வந்ததாக கூறப்படுகிறது. படைகளை விலக்கிக் கொள்ள முடிவு எடுக்கப்பட்ட நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய எல்லைப் பகுதியில் ஊடுருவிய நிலைகளில் இருந்து சீனா பின்வாங்கத் தொடங்கி உள்ளது. அஜித் தோவல் மற்றும் வாங் யி இடையிலான நல்ல நட்புறவு எல்லை பிரச்சினைக்கு தீர்வு காண ஒரு காரணம் எனவும் சொல்லப்படுகிறது. 


Next Story

மேலும் செய்திகள்