இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்... அதிரடியாக குறையும் விலை
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு கொடுத்துள்ளதால், விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு...
சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு கொடுத்துள்ளதால், விலை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு... இந்தியாவில் சமையல் எண்ணெய் பயன்பாடு மிக அதிகமாக உள்ள நிலையில், கடந்த சில மாதங்களாக எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்து வருவது மக்களை கவலை அடைய செய்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் 60 சதவீத சமையல் எண்ணெய் பயன்பாடு வெளிநாட்டு இறக்குமதியை நம்பியே உள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா போரால், அந்நாடுகளில் இருந்து சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதி கடுமையாக பாதித்தது விலை உயர்வுக்கு முக்கிய காரணம் என கூறப்படுகிறது. இதுபோன்ற காரணங்களால் ஏப்ரலில் மட்டும் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக 7.79 சதவீதமாக உயர்ந்தது. குறிப்பாக சமையல் எண்ணெய் சார்ந்த உணவு பொருட்களின் மொத்த பணவீக்கம் 17.28 சதவீதமாக உயர்ந்ததாக மத்திய அரசு தகவல் வெளியிட்டது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக, சோயா எண்ணெய் மற்றும் சூரிய காந்தி எண்ணெய் இறக்குமதிக்கு மத்திய அரசு வரி விலக்கு அறிவித்துள்ளது. இறக்குமதிக்கு மொத்தம் 35 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது வரி விலக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை 20 லட்சம் மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் இறக்குமதிக்கு சுங்க வரி மற்றும் வேளாண் உள்கட்டமைப்பு மேம்பாட்டு வரிக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் உள்நாட்டில் சமையல் எண்ணெய் விலை குறைவதோடு, பணவீக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என நிதி அமைச்சகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
Next Story