"பென்னிகுயிக் பிறந்த மண்ணில் தமிழக அரசு சார்பில் சிலை" - முதலமைச்சர் ஸ்டாலின்

முல்லை பெரியாறு அணையை கட்டிய ஜான் பென்னி குயிக்கிற்கு அவரது பிறந்த மண்ணில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
x
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய, பெரியாற்றின் குறுக்கே 1895ம் ஆண்டு முல்லை பெரியாறு அணையை கட்டினார்,  ஆங்கிலேய பொறியாளர் ஜான் பென்னி குயிக்.

பல இடையூறுகளை கடந்து, சொந்த பணத்தை செலவு செய்து முல்லை பெரியாறு அணையை அமைத்தவர் என பென்னிகுயிக்கை புகழ்ந்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், அவர் பிறந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி பகுதியில் தமிழக அரசு சார்பில் சிலை நிறுவப்படும் என அறிவித்துள்ளார்.

அனைத்து லண்டன் வாழ் தமிழர்களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, இங்கிலாந்து சட்டப்படி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் ஒப்புதலை பெற்றதாக முதலமைச்சர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பென்னி குயிக்கின் பிறந்த நாளில் இந்த அறிவிப்பை வெளியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாக குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், முல்லை பெரியாறு அணையின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை எந்நாளும் விட்டுக்கொடுக்காமல் காப்போம் என்றும், அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் உறுதிபட தெரிவித்துள்ளார்.

2000ஆம் ஆண்டில் மதுரையில் பென்னி குயிக் சிலையை கருணாநிதி திறந்து வைத்ததையும், தேனி மாவட்டம் கூடலூரில் தமிழக அரசு சார்பில் வெண்கல சிலையுடன் மணிமண்டபம் அமைக்கப்பட்டதையும் ஸ்டாலின் நினைவுக்கூர்ந்துள்ளார்.

காந்தி, அம்பேத்கர் போன்ற தேசிய தலைவர்களின் சிலைகள் அயல்நாடுகளில் அவ்வப்போது திறக்கப்பட்டு வந்தாலும்,
அயல்நாட்டை சேர்ந்த ஒருவரின் சிலையை, அயல்நாட்டிலேயே ஒரு மாநில அரசு நிறுவுவது அரிதானது என்பது குறிப்பிடத்தக்கது.Next Story

மேலும் செய்திகள்