தீபாவளி சிட்பண்ட் நடத்தி பணம் மோசடி - குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய தடுப்பூசி விபரம்

சென்னையில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி பண மோசடி செய்த பெண்ணை, கொரோனா தடுப்பூசி செலுத்திய தகவலை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
தீபாவளி சிட்பண்ட் நடத்தி பணம் மோசடி - குற்றவாளியை கண்டுபிடிக்க உதவிய தடுப்பூசி விபரம்
x
சென்னையில் தீபாவளி சிட்பண்ட் நடத்தி பண மோசடி செய்த பெண்ணை, கொரோனா தடுப்பூசி செலுத்திய தகவலை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை கொடுங்கையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரி மற்றும் சசிகலா என்ற இரண்டு பெண்கள் தீபாவளி சீட்டுப்பணம் வசூலித்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு சுமார் 60 லட்ச ரூபாய் வரை பணம் வசூலித்த அவர்கள், பணத்தை மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் அப்போதே சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளித்தனர். உடனடியாக களமிறங்கிய போலீசார், இதில் ஈஸ்வரி என்ற பெண்ணை அப்போதே கைது செய்தனர். ஆனால் சசிகலா என்ற பெண் என்ன ஆனார் என்பதே தெரியவில்லை. 

2 வருடங்களாகியும் அவரை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறி வந்தனர். மாயமான சசிகலா செல்போன், வங்கி, ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்ட எதையும் பயன்படுத்தாமல் இருந்து வந்ததால் அவர்களால் அவரை கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டிருந்தது. 

இந்த நிலையில் தான் போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி விபரங்கள் குறித்த எண்ணம் தோன்றியது. கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் தங்களுடைய ஆதார் கார்டு, செல்போன் உள்ளிட்ட விபரங்களை கொடுக்க வேண்டியது கட்டாயம். அப்படி அவர்கள் கொடுக்கும் தகவல்கள் அனைத்துமே இணையத்தில் பதிவேற்றி இருப்பார்கள் என்பதால் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தை போலீசார் நாடினர். 

சசிகலா என்ற பெயரில் மட்டும் 1000க்கும் மேற்பட்டோர் இருந்த நிலையில் அவை அத்தனையும் சோதனை செய்யப்பட்டது. முகவரி, ஆதார் கார்டு எண் உள்ளிட்ட விபரங்களை எல்லாம் தெளிவாக விசாரித்தபோது சிக்கினார் சசிகலா. 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சின்ன காஞ்சிபுரம் என்ற பகுதியில் நடந்த தடுப்பூசி முகாமில் சசிகலா முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டது தெரியவந்தது. உடனடியாக அங்கு சென்ற போலீசார், ஒரு வாரம் அங்கேயே முகாமிட்டு அவரை சுற்றி வளைத்தனர். 

வசதி வாய்ப்பாக வாழ்ந்து வந்த சசிகலா, ஒரு இடத்தில் ஒரு மாதத்திற்கு மேல் தங்குவது கிடையாதாம்... வீட்டு வேலை செய்வது, சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்வது என தன் தொழிலையும் அவ்வப்போது மாற்றிக் கொண்டே இருந்துள்ளார். சின்ன காஞ்சிபுரம் பகுதியில் ஆயிரம் ரூபாய்க்கு வாடகைக்கு ஒரு சிறிய அறையை எடுத்து அங்கே தங்கி வந்ததும் உறுதியானது. 

இவரின் கணவர், பிள்ளைகள் என எல்லாரும் பிரிந்து சென்ற நிலையில் தனியாக வசித்து வந்த அவர், மோசடி பணத்தை வைத்து விரும்பிய படி வாழ்ந்துள்ளார். இதனிடையே போலீசாருக்கு 2 வருடங்களாக டிமிக்கி கொடுத்து வந்த அவர், தடுப்பூசி தகவலால் வசமாக சிக்கியிருக்கிறார்.

Next Story

மேலும் செய்திகள்