கொரோனா பரவல்: 3வது அலை - எச்சரிக்கும் ஆய்வுகள்...!

கொரோனா பரவல் வேகமெடுத்தால் அதனை எதிர்கொள்ள போதிய ஆக்சிஜன் கையிருப்பு உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
x
மே மாதம் கொரோனா இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது, தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை பன்மடங்கு அதிகரித்தது.

34,000த்திற்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதியாகி, ஆக்சிஜன் தேவை 560 மெட்ரிக் டன்னாக அதிகரித்ததால் தேவையை பூர்த்தி செய்ய சிரமப்பட்டது தமிழ்நாடு அரசு. தற்போது பாதிப்பு குறைந்திருந்தாலும், மூன்றாம் அலை பரவக்கூடும் என எச்சரிக்கை மணி ஒலிக்க தொடங்கியுள்ளன.

அண்மையில் ஐஐடி வெளியிட்ட கணிப்பின்படி தமிழ்நாட்டில் மூன்றாவது அலை பரவல் ஏற்படும் பட்சத்தில் தினசரி 40 ஆயிரம் பேர் பாதிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை பாதிப்பு அதிகரித்தால், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதில் முனைப்பு காட்டியுள்ளது சுகாதாரத்துறை.

ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க சிஎஸ்ஆர் நிதிப் பங்களிப்பில் தமிழகத்தில் 26 ஆக்ஸிஜன் உற்பத்தி அலகுகள் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. கூடுதலாக 59 உற்பத்தி அலகுகளை நிறுவும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது

இதோடு, PM CARES நிதி மூலமாக வரும் 15ஆம் தேதிக்குள் கூடுதலாக 70 ஆக்சிஜன் உற்பத்தி அலகுகளை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 155 அலகுகள் வாயிலாக அரசு மருத்துவமனைகளில் 180 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் நேரடியாக உற்பத்தி செய்ய முடியும் என கூறப்படுகிறது

இதைத் தவிர ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளிடமிருந்து நேரடியாக 444 மெட்ரிக் டன் வரை ஆக்சிஜன் கிடைக்கும் என்பதால்,ஒட்டுமொத்த ஆக்சிஜன் கையிருப்பு 600 டன்னாக உயர்த்த முடியும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், மத்திய அரசு கடந்த முறை வழங்கியது போன்று 200 மெட்ரிக் டன் ஆக்சிஜனை வழங்கினால் மூன்றாவது அலை வந்தாலும் சமாளித்துவிடலாம் என்பது சுகாதாரத்துறையின் நம்பிக்கை.


Next Story

மேலும் செய்திகள்