கொரோனா நிவாரண நிதிக்கு 2 சவரன் தங்க செயின் - முதல்வரை நெகிழ வைத்த இளம்பெண்!

முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு இரண்டு சவரன் தங்க செயினை அனுப்பிய பெண்ணிற்கு வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின்.
x
முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு இரண்டு சவரன் தங்க செயினை அனுப்பிய பெண்ணிற்கு வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளார், முதலமைச்சர் ஸ்டாலின். மேட்டூர் அணை திறப்பிற்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் பலரும் மனு அளித்த நிலையில், அதில் இளம்பெண் ஒருவரது கடிதம் தனது கவனத்தை ஈர்த்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மிக ஏழ்மையான நிலையில், தாயை இழந்து தவித்து வரும் செளமியா என்ற இளம்பெண், முதலமைச்சரின் கொரோனா நிதிக்கு தனது கழுத்தில் இருந்த இரண்டு சவரன் தங்க செயினை நிதியாக அளித்துள்ளார். அதோடு அவர் எழுதிய கடிதத்தில் பொறியியல் பட்டதாரியான தாம் வேலையின்றி தவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் தனது ஊரின் அருகே தனியார் நிறுவனத்திலாவது வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்க வேண்டும் என முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கடிதத்தை படித்த முதலமைச்சர் ஸ்டாலின்,  பேரிடர் காலத்தில் கொடையுள்ளத்தோடு உதவ முன்வந்த செளமியாவின் எண்ணம் நெஞ்சத்தை நெகிழ வைப்பதாக தெரிவித்ததோடு, செளமியாவுக்கு விரைவில் அவரது படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்