முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றது. 125 இடங்களில் வென்ற திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது.
முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின்
x
முதலமைச்சராக பொறுப்பேற்றார் மு.க. ஸ்டாலின் 

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றது. 125 இடங்களில் வென்ற திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ளது. கட்சியின் சட்டப்பேரவை தலைவராக தேர்வு செய்யப்பட்ட ஸ்டாலினுக்கு ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். இதனையடுத்து பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் இன்று நடைபெற்றது. விழாவிற்காக ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டு சென்ற ஸ்டாலின் 8.55 மணியளவில் ஆளுநர் மாளிகையை வந்தடைந்தார். அங்கு அவரை தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வரவேற்றார். ஆளுநர் வருகைக்காக சிறிது நேரம் காத்திருந்த ஸ்டாலின், அவர் வந்ததும் தன்னுடைய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களை அறிமுகம் செய்து வைத்தார். அதனை தொடர்ந்து தனது குடும்ப உறுப்பினர்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.

அதனை தொடர்ந்து புதிய அமைச்சரவை பதவியேற்கும் விழா எளிமையாக நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் 23-வது முதலமைச்சராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அப்போது அவருடைய மனைவி துர்க்கா ஸ்டாலின் ஆனந்த கண்ணீர்விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், ஸ்டாலின் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்றதை தொடர்ந்து அவருடைய அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் 33 பேரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். திமுக மூத்த தலைவர் துரைமுருகன், கே.என். நேரு, பெரியசாமி, பொன்முடி, எ.வ. வேலு உள்ளிட்டோர் வரிசையாக அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா முடிந்ததும் முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் 33 அமைச்சர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர். விழாவில் கலந்துக் கொண்ட விருந்தினர்களுக்கு ஆளுநர், விருந்து அளித்து உபசரித்தார்.

கொரோனா பரவல் காரணமாக பதவியேற்பு விழா எளிமையாக நடைபெற்றது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் ஆளுநர் மாளிகைக்கு வெளியே கூடியிருந்த மக்கள், பதவியேற்பு விழாவிற்கு வந்த ஸ்டாலினுக்கு கையசைத்து வரவேற்பு மற்றும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

பதவியேற்பு விழாவில் அதிமுக சார்பில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துக் கொண்டார். மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், கவிஞர் வைரமுத்து, திமுக எம்.எல்.ஏ.க்கள்  உள்ளிட்டோர் விழாவில் கலந்துக் கொண்டனர். நீதிபதிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். 

முதலமைச்சராக பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்கு சென்றார். அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் திரு உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது உணர்ச்சிப்பொங்க கண்ணீர் விட்டு ததும்பிய அவருக்கு, அவருடைய சகோதரி செல்வி ஆறுதல் கூறி தேற்றினார். பின்னர் தாயார் தயாளு அம்மாளிடம் ஆசி பெற்றார். 



 

Next Story

மேலும் செய்திகள்