குடிபோதையில் கணவன், மனைவி 2 பேரும் நீரில் மூழ்கி பலி - தாய், தந்தையை இழந்து ஆதரவின்றி நிற்கும் குழந்தை

பொள்ளாச்சி அருகே குடிபோதையில் இருந்த கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவால் அவர்களின் 3 வயதான குழந்தை ஆதரவின்றி நிற்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.
குடிபோதையில் கணவன், மனைவி 2 பேரும் நீரில் மூழ்கி பலி - தாய், தந்தையை இழந்து ஆதரவின்றி நிற்கும் குழந்தை
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடிவலசு பகுதியில் தனியாருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில்  மலைவாழ் இனத்தைச் சேர்ந்த பிரபு குமார் தன் மனைவி நந்தினி மற்றும் 3 வயதான ஆண் குழந்தையுடன் வசித்து வந்தார். 

தோட்டத்தில் விவசாய கூலி வேலை பார்த்து வரும் கணவன், மனைவி இருவருமே மது குடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்த நிலையில் அவ்வப்போது உறவினர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைப்பது வழக்கம். சம்பவத்தன்று இருவருமே மதுபோதையில் இருந்ததால் வாக்குவாதம் அதிகமாகி கைகலப்பு வரை சென்றுள்ளது. 

ஆத்திரத்தின் உச்சத்தில் இருந்த நந்தினி, திடீரென வேகமாக சென்று தன் வீட்டின் முன்புறம் இருந்த கிணற்றில் விழுந்துள்ளார். அவரை பின் தொடர்ந்து சென்ற பிரபுகுமாரும் கிணற்றில் குதித்து அவரை காப்பாற்ற முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் இருவருமே மதுபோதையில் இருந்ததால் அவர்களால் உயிர் தப்ப முடியவில்லை. தாய், தந்தையை காணாமல் நீண்ட நேரமாக அழுது கொண்டிருந்த சிறுவனை பார்த்த உறவினர்கள் என்னவென்று வந்து பார்த்த போது தான் கிணற்றில் 2 பேரும் சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ந்தனர். 

இதுகுறித்த தகவல் உடனே போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த  போலீசார், 2 பேரின் சடலங்களையும் மீட்டனர். பேசித் தீர்க்க வேண்டிய குடும்ப பிரச்சினையை குடிபோதையில் அவசர கதியில் கையாண்டதால் இவர்களின் 3 வயது குழந்தை இப்போது ஆதரவின்றி தவிப்பது சோகத்தின் உச்சம்... 


Next Story

மேலும் செய்திகள்