பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தொல்லியல் துறை பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்க செம்மொழியான தமிழ் மொழியை தவிர்த்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி யார் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
பொறுப்பற்ற முறையில் நடந்துகொள்ளும் அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? - மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
x
உத்திர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வரும் மத்திய தொல்லியல் துறை கல்லூரியில்,  2 ஆண்டு முதுகலை பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்க அறிவிப்பாணை வெளியானது.  

இதற்கான கல்வி தகுதியில் பழமையும், பெருமையும் மிக்க செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதாக புகார் எழுந்தது.  

இந்த அறிவிப்பாணையை ரத்து செய்து,  கல்வி தகுதியில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைக்க உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் ரமேஷ் குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது மத்திய அரசு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் தரப்பில், தொல்லியல் துறை சார்பில் செம்மொழியான தமிழ் மொழியையும் இணைத்து நேற்று அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் மத்திய அரசு வழக்கறிஞரிடம் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

செம்மொழியான தமிழ் மொழியை   தவிர்த்து அறிவிப்பாணை வெளியிட்ட அதிகாரி யார் என்று கேட்ட  நீதிபதிகள், அந்த அதிகாரி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்த பின்புதான் மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதிகள் தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் ஆர்வலர்களும் குரல் எழுப்பிய பின்புதான் 
இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.

பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்ளும் அதிகாரி மீது  என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து மத்திய அரசு விரிவான பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை  நீதிபதிகள் ஒத்திவைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்