மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடக்கம்

தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கி உள்ள நிலையில் முதல் கட்டமாக சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்பட்டன.
மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை தொடக்கம்
x
தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்து இன்று தொடங்கி உள்ள நிலையில், முதல் கட்டமாக சென்னையில் இருந்து 
வெளியூர்களுக்கு 400 பேருந்துகள் இயக்கப்பட்டன. முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும், பேருந்து நிலையத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.  ஒரு பேருந்தில் 26 முதல் 32 பயணிகள் வரை மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

ரயில் போக்குவரத்து - பயணிகள் ஆர்வம்

இன்று முதல் தமிழகத்தில் ரயில் சேவை தொடங்கி உள்ள நிலையில், பயணிகள் அதிக ஆர்வத்துடன் அதில், பயணம் செய்தனர். முதற்கட்டமாக 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. முன்பதிவு செய்த பயணிகள் காலையிலேயே ரயில் நிலையத்தில் திரண்டனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், தீவிர பரிசோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். இன்று காலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து  கோவைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டுச் சென்றது.

மதுரையில் இருந்து வெளியூர்களுக்கு ஏராளமான பேருந்துகள் இயக்கம்

மாவட்டங்களுக்கு இடையே பேருந்து சேவை இன்று தொடங்கி உள்ள நிலையில், மதுரையில் இருந்து ஏராளமான பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்பட்டன. முதற்கட்டமாக மதுரையில் இருந்து நெல்லைக்கு பேருந்துகள் ஓடத் தொடங்கின.
இதையொட்டி, அதிகாலையில் இருந்தே பயணிகள் பேருந்து நிலையங்களில் திரண்டனர். 

கோவையில் இருந்து சென்னைக்கு 374 பயணிகளுடன் புறப்பட்ட ரயில்

கொரோனா அச்சம் காரணமாக பல மாதங்களுக்கு பிறகு ரயில்கள் இன்று இயக்கப்பட்டு வருகின்றன. தொழில் நகரமான கோவையில் இருந்து சென்னைக்கு காலை 6.10 மணி அளவில் சிறப்பு ரயில் புறப்பட்டது. முன்பதிவு செய்திருந்த 374 பயணிகள் அதில் பயணம் செய்தனர். முன்னதாக, ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டது.

நெல்லையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கம்

நெல்லையில் இருந்து தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, மதுரை ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டது. மேலும் கோவை, திருச்சி, சென்னை உள்ளிட்ட அதிக தூரம் செல்லக் கூடிய விரைவு பேருந்துகளும் சேவையை தொடங்கி உள்ளன. பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கைகளில் பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது

சென்னையில் மெட்ரோ  ரயில் சேவை இன்று முதல் தொடங்கி உள்ளது. விமான நிலையம் முதல் வண்ணாரப்பேட்டை வழித்தடத்தில் இயக்கப்பட்ட முதல் ரயில் சேவையை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார். பயணிகள் அனைவரும் உடல்வெப்ப பரிசோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டனர். சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் மெட்ரோ ரயில் இருக்கைகளில் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரு ரயிலில் 200 பேர் மட்டுமே பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

விழுப்புரம் கோட்டத்தில் 2 ஆயிரம் பேருந்துகள் இயக்கம்

விழுப்புரத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பேருந்து சேவை தொடங்கியது. விழுப்புரம் கோட்டத்தில் இன்று முதல் மாவட்டங்களுக்கிடையே 2 ஆயிரம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மண்டலத்திற்கு உட்பட்ட விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 2 மாவட்டங்களில் 147 நகர பஸ்கள், 255 புறநகர பஸ்கள் என மொத்தம் 402 பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள்

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, வரும் 12ஆம் தேதி முதல் சென்னை சென்ட்ரல் - டெல்லி, சென்னை சென்ட்ரல் - சாப்ரா இடையே இருமார்க்கத்திலும் ரயில்கள் இயக்கப்படும். வரும் 15ஆம் தேதி முதல் திருச்சி-ஹவுரா  இடையே இருமார்க்கத்திலும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு வரும் 10ஆம் தேதி காலை 8 மணிக்கு தொடங்குகிறது. 

மதுரையில் இருந்து சென்னைக்கு ரயில் இயக்கம்

மதுரையில் இருந்து சென்னைக்கு இன்று காலை சிறப்பு ரயில் புறப்பட்டது. வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மற்றும் வழித்தடத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. அதில், இன்று சுமார் 700 பயணிகள் பயணம் செய்தனர். முன்னதாக, ரயில் நிலையத்தில் கொரோனா தடுப்பு வழிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட்டு பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். 

களைகட்டிய திருச்சி பேருந்து நிலையம்

திருச்சியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டன. மதுரை, தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் மற்றும் நெடுந்தூரம் செல்லும் விரைவு பேருந்துகளும் இயக்கத்திற்கு வந்தன. பேருந்துகள் சேவை மீண்டும் தொடங்​கி உள்ளதால், திருச்சி பஸ் நிலையம் களைகட்டி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்