"ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் வழக்கு - ஓரிரு நாளில் சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்கப்படும்"

ரவுடி சங்கர் என்கவுன்ட்டர் குறித்த வழக்கு ஓரிரு நாளில் சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
x
சென்னை அயனாவரத்தை சேர்ந்த ரவுடி சங்கரை பிடிக்க சென்ற காவலர்களை தாக்கியதால், போலீசார் சுட்டதில் அவர் உயிரிழந்தார். இந்நிலையில், இந்த வழக்கை, சி.பி.சி.ஐ.டி. அல்லது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி அவரது தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்தார். சங்கர் உடலை இரண்டாவது முறையாக உடற்கூறு ஆய்வு செய்ய வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை விடுத்தார். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன் ஆஜராகி, மாஜிஸ்திரேட் விசாரணைக்கு பிறகு அவர் முன்னிலையில் தான் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டதாகவும், முதலில் உடலை வாங்க குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் மறுநாள் உடல் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அயனாவரம் காவல் நிலைய வழக்கை சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க ஆயத்த பணி நடந்து வருவதாகவும், ஓரிரு நாட்களில் மாற்றம் செய்யப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார். இவற்றை பதிவு செய்த நீதிபதி, வழக்கு குறித்து தமிழக அரசும், காவல் துறையும் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்