தொடர்மழை - ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இரண்டு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது.
தொடர்மழை - ஆர்ப்பரித்து கொட்டும் அருவிகள்
x
கொடைக்கானல் மலைப்பகுதிகளில்  இரண்டு வாரத்திற்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால், கொடைக்கானல் நகரப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளி நீர் வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, தேவதை நீர் வீழ்ச்சி, உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும், புலிச்சோலை, செண்பகனூர், பெருமாள்மலை உள்ளிட்ட பகுதிகளில் ஆங்காங்கே  தற்காலிக நீர்வீழ்ச்சி தோன்றியுள்ளன.

குற்றால அருவிகளில் கொட்டும் தண்ணீர் - ரம்மியமான சூழல் 

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டி வருகிறது. கடந்த ஜுன் மாதம் குற்றால சீசன் தொடங்கியது. இந்நிலையில், குற்றால மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டும் நிலையில், சாரல் மழையும் சேர்ந்து, ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை செய்யப்பட்டுள்ளதால், அருவி கரைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. 

கொசஸ்தலை ஆற்றில் நீர் வரத்து

கனமழை காரணமாக தமிழக - ஆந்திர எல்லையோர  பகுதியான  நகரி அம்மபள்ளி அணை முழுமையாக நிரம்பியது. இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக  அம்மபள்ளி அணை திறக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் யாரும் குளிக்கவோ,  துணி துவைக்கவோ ஆற்றில் இறங்க  வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

புறா பிடிக்க கிணற்றுக்குள் இறங்கிய இளைஞர் - 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த‌ பரிதாபம்

மதுரை திருமங்கலம் அருகே 70 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த இளைஞர் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்கப்பட்டார். பெரிய மறவன்குளம் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்காளை,  கிணற்றில் உள்ள புறாவை பிடிப்பதற்காக கயிறு கட்டி கிணற்றுக்குள் இறங்கினார். அப்போது கயிறு அறுந்து விழுந்த‌தால், முத்துக்காளை கிணற்றில் விழுந்தார். இதில் இடுப்பு முறிந்த நிலையில், உயிருக்கு போராடிய அவரை, 1 மணி நேர போராட்டத்துக்கு பின் தீயணைப்பு துறையினர்  மீட்டனர்.

மலைத்தேனை ருசிக்க முகாமிட்டுள்ள கரடிகள்

ஊட்டி அருகே மலைத்தேனை சாப்பிட கரடிகள் முகாமிட்டுள்ளன. ஊட்டி - கல்லட்டி மலைப் பாதையில் பாறைகளில் மலை தேன், கொம்பு தேன் கூடுகட்டி தேனை சேகரித்து வைத்துள்ளது. கரடிகளுக்கு பிடித்த உணவு தேன் என்பதால்,  தேனை சாப்பிட பாறைகளில் முகாமிட்டுள்ளன. அடிக்கடி பாறைகளில் கரடிகள் உலா வருவதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

நட்சத்திர ஆமைகள் விற்பனை - 8 பேருக்கு வனத்துறை அபராதம்

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே அரிய வகை நட்சத்திர ஆமைகள் விற்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சரக்கு வாகனத்தில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நட்சத்திர ஆமைகளை பறிமுதல் செய்தனர், இது தொடர்பாக அரியலூர் பகுதியை சேர்ந்த விஜய், சினனத்துரை, செந்தில் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்திய வனத்துறையினர், ஒவ்வொருவருக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். 

கள்ளழகர் கோவில் ஆடி பிரமோற்சவ திருவிழா - தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர்

மதுரை கள்ளழகர் கோவிலில் ஆடி பிரமோற்சவ எட்டாம் நாள் திருவிழாவை  முன்னிட்டு, கள்ளழகர் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளினார். பெருமானுக்கு பட்டாச்சாரியார்கள் சிறப்பு அலங்காரம் மற்றும் விசேஷ பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால், கோவில் நிர்வாகிகள் மற்றும் பணியாளர்கள் மட்டும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 


Next Story

மேலும் செய்திகள்