எம்எல்ஏ இதயவர்மன் தந்தை தலைமறைவு - தேடும் பணி தீவிரம்

துப்பாக்கி சூடு விவகாரத்தில் திமுக எம்எல்ஏ இதயவர்மனை காவலில் எடுத்த போலீசார், சரமாரியான கேள்விகளால் துளைத்தெடுத்தனர். பல மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.
எம்எல்ஏ இதயவர்மன் தந்தை தலைமறைவு - தேடும் பணி தீவிரம்
x
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே செங்காடு கிராமத்தில் நிலத் தகராறு காரணமாக கடந்த 11ஆம் தேதி இருபிரிவினருக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அப்போது திமுக எம்எல்ஏ இதயவர்மனின் தந்தை லட்சுமிபதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டதில் அந்த வ​ழியாக வந்த கீரை வியாபாரி சீனிவாசன் படுகாயமடைந்தார். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலீசார் திமுக எம்எல்ஏ இதயவர்மனை கைது செய்தனர். அவரை காவலில் எடுத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையில் அவரை போலீசார் செங்காடு கிராமத்திற்கு அழைத்துச் சென்றனர். 

காஞ்சிபுரம் எஸ்.பி. சண்முகபிரியா, செங்கல்பட்டு எஸ்.பி. பாஸ்கரன்  தலைமையில் செங்கல்பட்டு ஏ.டி.எஸ்.பி, பொன்ராம், மாமல்லபுரம் ஏ.எஸ். பி சுந்தரவதனம் உள்ளிட்ட அதிகாரிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசாரும் செங்காடு கிராமத்தில் குவிக்கப்பட்டிருந்தனர்.

10க்கும் மேற்பட்ட வெடிகுண்டு நிபுணர்களுடன் சென்ற போலீசார், இதயவர்மனின் வீடு, அலுவலகம், குடோன் உள்ளிட்ட இடங்களில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். 

கைப்பற்றப்பட்ட துப்பாக்கி யாரிடமிருந்து வாங்கியது?  என்ன தேவைக்காக துப்பாக்கி வைத்திருந்தீர்கள்? 3 துப்பாக்கிகளை வீட்டில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என்பது உள்ளிட்ட கேள்விகள் அடுத்தடுத்து போலீசாரால் கேட்கப்பட்டன. 

விசாரணையில் இதயவர்மன் வைத்திருந்தது வேட்டை துப்பாக்கி என தெரியவந்த நிலையில் அது தொடர்பாகவும் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. மேலும் குடோனில் சோதனை செய்த போது 2 பெட்டிகளில் வாணவேடிக்கைக்கு பயன்படுத்தப்படும் பட்டாசுகள் இருப்பதை பார்த்த அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர். 

இதனிடையே தலைமறைவாக உள்ள எம்எல்ஏவின் தந்தை லட்சுமிபதி மற்றும் அவரை சார்ந்த 5 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் நடைபெற்று வருகிறது. 

துப்பாக்கி சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று திரும்பிய கீரை வியாபாரி சீனிவாசன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

எம்எல்ஏ இதயவர்மனிடம் போலீசார் நடத்திய விசாரணை நிறைவடைந்த நிலையில், அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே அவரின் ஜாமீன் மனுவை செங்கல்பட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தை நாட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதேநேரம்  இந்த சம்பவத்தில் எதிர் தரப்பினரான இமயம்குமார் மற்றும் அவரது தரப்பை சேர்ந்த 11 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களும் ஜாமீன் கேட்டு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்