முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை

கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார்.
முதலமைச்சர் இன்று கிருஷ்ணகிரி பயணம் - கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை
x
கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் செல்கிறார். இன்று கிருஷ்ணகிரி செல்லும் முதலமைச்சர், நாளை சேலம் மற்றும் வெள்ளிக்கிழமையன்று ஈரோடு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மாவட்ட ஆட்சியர்  மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்துகிறார். அங்கு பல்வேறு நலத் திட்டப் பணிகளையும் அவர் திறந்து வைக்கிறார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை அவர் சென்னை திரும்புகிறார்.

ஆன்லைன் பதிவு எப்போது தொடங்கும்? - அமைச்சர் அன்பழகன் இன்று அறிவிப்பு


பொறியியல் படிப்பு  மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் பதிவு குறித்து உயர்கல்வித்துறை  அமைச்சர் அன்பழகன் இன்று அறிவிக்க உள்ளார். தமிழகத்தில் பொறியியல் படிப்பு  மாணவர்கள் சேர்க்கைக்கான ஆன்-லைன் பதிவு வழக்கமாக மே மற்றும் ஜூன் மாதங்களில் நடைபெறும். கொரோனா பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு கால தாமதமாக துவங்குகிறது. இதுகுறித்து உயர்கல்வித்துறை  அமைச்சர் அன்பழகன் இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இன்று காமராஜர் பிறந்த தினம்: "கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட வேண்டும்" - தி.மு.க. வினருக்கு ஸ்டாலின் அழைப்பு


பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளான இன்று, சென்னை அண்ணா அறிவாலயத்தில், அவரது உருவப் படத்திற்கு  மரியாதை செலுத்த உள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்றைய தினத்தை , கல்வி வளர்ச்சி நாளாகக் கடைப்பிடித்து, காமராஜரின் பெருமைகளை இன்றைய தலைமுறை அறியப் பேசவும், போற்றவும் தேவையான பணிகளை செய்ய கட்சியினரை கேட்டுக் கொண்டுள்ளார். 

நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மையம் இன்று முதல் 5 நாட்கள் மூடல்


நெல்லை மாவட்டம் காவல்கிணறு மகேந்திரகிரி -இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவன வளாகம், இன்றுமுதல் மேலும் ஐந்து நாட்கள் மூடப்படுகிறது. கடந்த 10ம் தேதி முதல் ஐந்து நாட்கள் மூடப்பட்ட நிலையில் மேலும் 5 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதியதாக மூன்று பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி கண்டறியப்பட்டதை தொடர்ந்து இன்று திறக்கப் படுவதாக இருந்த விண்வெளி ஆராய்ச்சி மையம் மீண்டும் ஐந்து நாட்களுக்கு மூடப்படுவதாக நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரையில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிப்பு


மதுரையில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலாகிறது.

நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற தினமான ஜூலை 15 ஆம் தேதியான இன்று


நீலகிரி மலை ரயிலுக்கு யுனெஸ்கோ பாரம்பரிய அந்தஸ்து பெற்ற தினமான ஜூலை 15 ஆம் தேதியான இன்று கொரோனா பாதிப்பு காரணமாக விழா இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. நீலகிரி மலை ரயில் என்று அழைக்கப்படும் என்எம்ஆர், சுற்றுலா பயணிகளை கவர்ந்ததாகும். 1854ம் ஆண்டு மலை ரயில் பாதை அமைக்கும் திட்டம் முதன் முதலாக உருவாக்கப்பட்டது. 1891ம் ஆண்டு ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது. 1899ம் ஆண்டு மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையில் ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதன்பின்னர் 1908ம் ஆண்டு ஊட்டி வரை இந்த ரயில் பாதை நீட்டிக்கப்பட்டது. உலகிலேயே இதுபோல ரயில்சேவை ஓரிரு இடங்களில் தான் உள்ளன. இந்த மலை ரயிலுக்கு, 2005 ஜூலை 15-ல் யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்தது

சிறப்பு எஸ்.ஐ பால்துரை ஜாமீன் மனு மீது விசாரணை 


சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில், கைதாகியுள்ள சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் பால்துரை, ஜாமீன் கேட்டு தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. 
இதற்கிடையே, உடல் நலக்குறைவு காரணமாக தூத்துக்குடி அரசு  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பால்துரை, தற்போது குணமடைந்ததால் சிறைக்கு அனுப்பப்பட்டார். அவருடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காவலர் தாமஸ் பிரான்சிஸும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். எனினும், தூத்துக்குடி பேரூரணி சிறைக்கு அவர்கள் கொண்டு செல்லப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரை சிறைக்கு இருவரும் கொண்டு செல்லப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்