தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலம்

தமிழகம் முழுவதும் உலக மகளிர் தினம் கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட்டம்...
x
முளைப்பாரி, தேவராட்டத்துடன் மகளிர் தினக் கொண்டாட்டம்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் உலக மகளிர் தினக் கொண்டாட்டம் களைகட்டியது. இதற்காக, வடுகபட்டி, ஜங்கால்பட்டி, கைலாசபட்டி, தேவதானப்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த 2020 பெண்கள் முளைப்பாரி எடுத்துவந்தனர். நீண்ட பேரணியில், பெண்கள் பலர் உற்சாக நடனமாடினர். மைதானத்துக்கு வந்த அவர்கள், பழமை மாறாமல், கும்மிபாட்டு, நடனத்துடன் உற்சாகமாக குலவையிட்டனர். பின்னர், 120-க்கும் மேற்பட்ட பெண்கள், இசை முழக்கத்துடன் தேவராட்டம் ஆடியது சிறப்பாக இருந்தது. இந்த நிகழ்வு சோழன் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது.  

ஊட்டியில் உலக மகளிர் தின கொண்டாட்டம்

ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உலக மகளிர் தினம் வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவில், மாவட்ட ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா மற்றும் பெண் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக கேக் வெட்டி, சுற்றுலா பயணிகளுக்கு இனிப்புகளை வழங்கினர். இதனிடையே,  படுகர் இன மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது. அதில், இசைக்கேற்றவாரு ஆட்சியர் இன்ன சென்ட் திவ்யா மற்றும் பெண் அதிகாரிகள் நடனமாடி பார்வையாளர்களின் கைத்தட்டலைப் பெற்றனர்.

காஞ்சிபுரத்தில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

காஞ்சிபுரம் அடுத்த தாமரைதாங்கலில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில்மாணவிகள் நடனத்துடன் உலக மகளிர் தினவிழா களைகட்டியது. பெண்களின் சாதனைகளை எடுத்துரைத்த பேச்சாளர் சுகிசிவத்தின் சொற்பொழிவு, மாணவிகளை கவர்ந்தது. விழாவில், நெசவு, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த மாற்றுத் திறனாளி பெண் உள்ளிட்ட 12 பெண்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாணவிகளின் பரதநாட்டியம் மற்றும் சினிமா பாடலுக்கு ஆடிய நடனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

தூத்துக்குடியில்  சர்வதேச மகளிர் தின விழா கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரபுரத்தில் ரோட்டரி  சங்கம் மற்றும் ஊராட்சி மன்றம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், உடல் ஆரோக்கித்தை வலியுறுத்தி உரல் குத்தல், திருகை உடைத்தல் போட்டிகள் நடைபெற்றது. இதில், திரளான பெண்கள் கலந்து கொண்டு, உணவு தானியங்களை உரலில் குத்தி, முறத்தால் தூசி புடைத்து அசத்தினர்.

விழிப்புணர்வு நாடகங்களுடன் மகளிர் தின விழா

குழந்தை திருமணம் மற்றும் கிராமங்களில் கழிப்பறையின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, சேலத்தில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், 300-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு, சமூக விழிப்புணர்வு நாடகங்களை நடித்துக்காட்டி அசத்தினார். இதை தொடர்ந்து, போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு, பரிசுகள் வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனையில் உலக மகளிர் தினம் விழா

திருப்பூரில் உலக மகளிர் தினம், மனநலம் பாதித்த பெண்களுடன் கொண்டாடப்பட்டது. சிக்கன்னா அரசு கலை கல்லூரி மாணவ - மாணவியர்கள் இதற்கான நிகழ்ச்சியை, திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்திருந்தனர். அதன்படி, மனநலம் பாதித்த பெண்கள், மற்றவர்களைபோல் சகஜ நிலையை உணரவும், அவர்களுக்கு ஒரு நினைவூட்டலை ஏற்படுத்தும் விதமாக கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள், தன்னிலை மறந்து பார்த்து ரசித்தனர்.Next Story

மேலும் செய்திகள்