"அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

அனுமதி இல்லாத குடிநீர் ஆலைகள் தொடர்பான உத்தரவை அமல் படுத்தாவிட்டால், நேரில் ஆஜராக நேரிடும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை செய்துள்ளது.
x
சட்டவிரோதமாக நிலத்தடி நீரை உறிஞ்சும் குடிநீர் ஆலைகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கில், அனுமதியில்லாத ஆலைகளை மூடவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை செயல்படுத்தியது குறித்து,  தாக்கல் செய்யப்பட்ட அறிக்கை மீது  அதிருப்தி அடைந்த நீதிபதிகள், உத்தரவை  முழுமையாக அமல்படுத்தவில்லை என சுட்டிக்காட்டினர். 
நீதிமன்ற உத்தரவை முறையாக அமல்படுத்தியது குறித்து மார்ச் 3 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர்கள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தவறினால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என்றும் எச்சரிக்கை செய்தனர்.  மாவட்ட ஆட்சியர்கள் இந்த பணியை செயல்படுத்தாவிட்டால், தமிழக அரசின் தலைமை செயலாளரையும் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் எனவும் நீதிபதிகள் எச்சரித்தனர்.

சட்டவிரோத குடிநீர் ஆலைகளுக்கு சீல் - வருவாய் துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை


சட்ட விரோத குடிநீர் ஆலைகளை மூட வேண்டும் என்கிற உயர்நீதிமன்ற உத்தரவை அடுத்து கடலூர் மாவட்டத்தில் பல குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சும் நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து கடலூர் மாவட்ட வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிலத்தடி நீரை உறிஞ்சும் நிறுவனங்களை ஆய்வு செய்தனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவின்பேரில்,  சட்ட விரோதமாக தண்ணீர் உறிஞ்சும் நிறுவனங்களுக்கு சீல் வைத்தனர். கடலூர் சிங்கிரிகுடி, திருவந்திபுரம், எம்.புதூர், அரிசிபெரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 13 நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்த சம்பவத்தால் கடலூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்