குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கம் : இஸ்லாமிய அமைப்புகள் 2 வது நாளாக போராட்டம்

சென்னை வண்ணாரப்பேட்டையில் இஸ்லாமியர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து விரிவாக பார்ப்போம்.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கம் : இஸ்லாமிய அமைப்புகள் 2 வது நாளாக போராட்டம்
x
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அதை திரும்ப பெற வலியுறுத்தியும் இஸ்லாமிய அமைப்புகள் சென்னை வண்ணாரப்பேட்டையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் சுமார் முன்றரை மணியளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், பங்கேற்று, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கமிட்டனர். பின்னர், போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போராட்டம் குறித்து தகவலறிந்து வந்த போலீசார், கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால், போலீசாருடன் போராட்டக்காரர்கள், வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இருதரப்பினருக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் ஒரு பிரிவினரை, போலீசார் கைது செய்து, தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி, இஸ்லாமியர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.  போராட்டம் வலுத்ததால் வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சுப்புலட்சுமி தலைமையில் அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இதனையடுத்து, சுமார் 4 மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்ததால், வடக்கு மண்டல இணை ஆணையர் கபில்சிபில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்து மீண்டும் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி, போராட்டக்காரர்களை கலைத்தனர். இதில் போராட்டக்காரர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர். இதனால், ஆத்திரம் அடைந்த போராட்டக்காரர்கள் பதிலுக்கு போலீசார் மீது கல்வீசி தாக்கினர். இதில் இணை ஆணையர் கபில்சிபில் குமார், ராஜமங்கலம் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் 2 பெண் போலீசார் உள்பட 5 போலீசார் காயம் அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்து வந்த சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், போராட்டக்காரர்களுடன் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் அங்கு போராட்டம் தொடர்ந்தது. இந்நிலையில், மாதவரம், அமைந்தகரை, மண்ணடி, புதுப்பேட்டை, எழும்பூர் உள்பட பல்வேறு இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சென்னை வண்ணாரப்பேட்டையில் நடந்த தடியடியை கண்டித்து மதுரை, திருச்சி, கோவை, செய்யாறு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை மாலை துவங்கிய போராட்டம் விடிய விடிய நடைபெற்று இரண்டாவது நாளாக நீடித்து வருகிறது. 

Next Story

மேலும் செய்திகள்