நம்பர் பிளேட் மூலம் வாகனங்களை கண்காணிக்க சென்னையில் அதிநவீன சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தம்

சென்னையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி கேமராக்களை பொருத்தி போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை கண்காணித்து வருகின்றனர்.
x
சென்னையில்  கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற செயல்களை  தடுக்க மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் நடவடிக்கையின் பேரில்  நகர் முழுவதும் முக்கிய இடங்களில் சுமார் 
2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் சென்னையில் குற்ற செயல்கள் குறைந்ததோடு, குற்றவாளிகளும் உடனுக்குடன் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் ஓடும் லட்சக்கணக்கான  வாகனங்களை கண்காணிக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் ANPR  என்று சொல்லக்கூடிய அதிநவீன  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இது வரை 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ANPR  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மூலம் சாலைகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளை ஸ்கேன் செய்து துல்லியமாக படம் எடுத்து, அவை செல்லும் இடங்களை கண்டறிய முடியும்  என்றும் காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். 

சாலையில் செல்லும் ஒரு வாகனம் என்ன கலர்  அதன் நம்பர் பிளேட் விவரம் உள்ளிட்டவற்றை  துல்லியமாக ஒரு நொடியில் ஸ்கேன் செய்து காட்டுகிறது இந்த ANPR  சிசிடிவி கேமராக்கள். 
அவை  எடுக்கும் புகைப்படத்தை வைத்து ஓட்டுநர்களின் அடையாளங்களை கண்டு பிடிக்க முடியும் என்றும் ,  வாகனம் சாலையை கடக்கும் நேரம், செல்லுமிடம் உள்ளிட்டவற்றை கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்க முடியும் என்றும் போக்குவரத்து காவலர்கள் தெரிவித்துள்ளனர். 

நம்பர் பிளேட் விவரங்களை கட்டுப்பாட்டு மையத்தில்  பதிவிட்டால் வாகனம் சாலையில் கடந்து சென்ற இடங்களை கண்டறிந்து வாகன திருட்டு உள்ளிட்ட குற்றங்களை தடுக்க முடியும் என்று கூறுகின்றனர்.  பகலில் மட்டும் அல்லாமல் இரவிலும் தெளிவாக படமெடுக்கும் வசதி உள்ளதால் 24 மணி நேரமும்  கண்காணிப்பை இந்த அதி நவீன கேமராக்கள் உறுதி செய்கின்றன. இதன் மூலம் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை எளிதாக கண்டுபிடித்து விட முடியும் , விபத்தை  ஏற்படுத்தி விட்டு தப்பிக்கும் வாகனங்களையும் எளிதாக  அடையாளம் காண முடியும் என்றும் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்