ரூ.1,022 கோடியில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா - கால்நடை உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசின் புதிய முயற்சி

சர்வதேச அளவில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடை பூங்கா, சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள நிலையில், அது கடந்து வந்த பாதை, அதனால் உருவாகும் பலன்களை விளக்குகிறது இந்த தொகுப்பு
ரூ.1,022 கோடியில் ஆசியாவின் மிகப்பெரிய கால்நடைப் பூங்கா - கால்நடை உற்பத்தியை அதிகரிக்க தமிழக அரசின் புதிய முயற்சி
x
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ், சேலம் மாவட்டம் தலைவாசலில் சர்வதேச கால்நடை பூங்கா அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

இந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர்,  அமெரிக்காவின் பஃபல்லோ நகருக்கு அருகில், ஓக்ஃபீல்ட் என்கிற இடத்தில் உள்ள கால்நடை பண்ணைக்கும் சென்றிருந்தார்.

சர்வதேச அளவில் மிகப்பெரிய கால்நடை பண்ணையான அங்கு,   நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட கலப்பின மாடுகளை உருவாக்கும் தொழில்நுட்பம், பால் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்தும் தொழில்நுட்பம் ஆகியவற்றை பார்வையிட்டு, அவற்றை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வழிகளையும் கேட்டறிந்து வந்தார்.

தலைவாசல் கால்நடை பூங்கா, சுமார் ஆயிரத்து 22 கோடி மதிப்பில் அமையும் என அறிவித்த நிலையில், விலங்கினங்கள் தொடர்பான உயர் ஆராய்ச்சிகளுக்காக  564 கோடியும், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் 196 கோடி ரூபாய் மதிப்பிலும், குடிநீர் திட்டங்கள் 262 கோடி மதிப்பிலும் அமைய உள்ளன.

நாட்டின கால்நடை, விலங்கினங்களை அழிந்து விடாமல் பாதுகாப்பது, அவற்றின் உற்பத்திப் பெருக்கத்திற்கான நவீன தொழில்நுட்பங்கள், பல்வேறு பயிற்சி திட்டங்களை இந்த பூங்கா செயல்படுத்தும்.

கறவை மாடுகள், ஆடுகள், வெண் பன்றி, நாட்டின நாய்கள் மற்றும் கோழியின பராமரிப்பு ஆராய்ச்சிகளும், அவற்றின் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கால்நடை மருத்துவம் குறித்த முதுநிலை மற்றும் ஆராய்ச்சி பட்டப்படிப்புகள், சான்றிதழ் பயிற்சிகள் மற்றும் பட்டயப் படிப்புகளும் இங்கு பயிற்றுவிக்கப்பட உள்ளது.


கால்நடை, மீன்வளம், கோழியின வளர்ப்பில் ஆர்வம் உள்ள தொழில் முனைவோர்களுக்கான ஒருங்கிணைந்த மையமாகவும் செயல்பட உள்ளது.

கால்நடை வளர்ப்பில் கருமாற்றுத் தொழில்நுட்பம், மரபணு ஆய்வு மூலம் கால்நடைகளின் தரம் மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் ஆராய்ச்சிகளும் செய்யப்படும்.

குறைந்த செலவில் மதிப்பு கூட்டப்பட்ட பால், இறைச்சி, முட்டை மற்றும் மீன் பொருட்கள் மூலம் வருமானத்தை அதிகரிப்பதற்கான ஆராய்ச்சிகளையும் இந்த பூங்கா மேற்கொள்ள உள்ளது.இந்த  பூங்கா மூலம் கால்நடை, விலங்கின ஆராய்ச்சியில் இந்திய அளவில் தமிழகம் முன்னிலை வகிக்கும் என்பதே பலரது எண்ணமாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்