தானே துயரில் இருந்து மீண்ட கடலூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு மீண்டும் பேரிடி

தானே புயலின் தாக்கத்தில் இருந்து மீண்டு வந்த கடலூர் மாவட்ட தென்னை விவசாயிகளுக்கு, மேலும் ஒரு பேரிடியை வெள்ளை ஈ என்ற பூச்சி கொடுத்துள்ளது.
x
2011 ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்தை புரட்டிப்போட்ட தானே புயலால் தென்னை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர். அடியோடு சாய்ந்த தென்னை மரங்களை விவசாயிகள் கனத்த இதயத்துடன் அப்புறப்படுத்திவிட்டு புதிய மரக்கன்றுகளை நட்டனர். அந்த தென்னை மரங்கள் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக விவசாயிகள் வருவாய் ஈட்டி வந்த நிலையில் , தற்போது வெள்ளை ஈயின் தாக்குதலால் பொருளாதார அழிவை சந்தித்துள்ளனர். வெள்ளை ஈ காற்றின் மூலம் பரவி தென்னையில் படர்ந்து காய்ப்பு திறனை குறைத்து விடுகிறது. 2016 ஆம் ஆண்டு பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னைகளை தாக்கிய வெள்ளை ஈ காற்றின் மூலம் பரவி இந்தாண்டு தொடக்கத்தில் கடலூர் வந்துள்ளன.

தென்னைகளின் காய்ப்பு திறனை வெள்ளை ஈ 10 சதவீதமாக குறைத்து விடுவதால், மட்டைகள் கருகி மரங்கள் உயிரிழக்கின்றன. ஆண்டுக்கு 600 காய்கள் வரை காய்க்கும் தென்னை மரங்களில் தற்போது 100 காய்கள் கூட கிடைப்பதில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். இதில் வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.





Next Story

மேலும் செய்திகள்