வசூலில் இழப்பை சந்தித்ததா தர்பார்? - போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்கள்

தர்பார் படம் வசூலில் இழப்பை சந்தித்ததாக விநியோகஸ்தர்கள் தரப்பில் கூறப்பட்ட நிலையில், படம் லாபம் தான் என திரையரங்க உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வசூலில் இழப்பை சந்தித்ததா தர்பார்? - போர்க்கொடி தூக்கிய விநியோகஸ்தர்கள்
x
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் பலத்த எதிர்பார்ப்புகளுடன் பொங்கல் பண்டிகைக்கு வெளியானது தர்பார். இதற்கு முன் ரஜினியின் காலா, பேட்ட உள்ளிட்ட படங்கள் அமோக வெற்றி பெற்றிருந்த நிலையில் தர்பார் படத்தின் மீதும் எதிர்பார்ப்பு அதிகம் இருந்தது. 

இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் காவல்துறை அதிகாரியாக ரஜினி நடிக்கிறார் என்ற தகவல் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. ஜனவரி 9ஆம் தேதி 2 ஆயிரம் தியேட்டர்களில் தர்பார் படம்  வெளியிடப்பட்டது. 

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் தர்பார் படம் வெளியான 4 நாட்களில் 150 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால் படத்தின் பட்ஜெட் 250 கோடி என்றும், வசூல் 195 கோடி மட்டுமே என்றும்  சர்ச்சைகள் எழுந்தன. 

தர்பார் படத்தால் 30 முதல் 70 கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்ததாக விநியோகஸ்தர்கள் சங்கம் தரப்பில் புகார் எழுந்தது. கர்நாடகாவை தவிர மற்ற மாநிலங்களில் தர்பார் படம் நஷ்டம் தான் என விநியோகஸ்தர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். 

ரஜினியின் நடிப்பில் இதற்கு முன் வெளியான பாபா, குசேலன், லிங்கா உள்ளிட்ட படங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில் தர்பாரும் அந்த வரிசையில் இடம் பெற்று இருப்பதாகவும் பேச்சு உள்ளது. 

இதுதொடர்பான பிரச்சினை ஒரு பக்கம் இருக்க, தர்பார் படம் நல்ல லாபத்தை தந்தது என திரைப்பட உரிமையாளர்கள் கூறி வருகின்றனர். எதிர்பார்த்ததை விட நல்ல லாபத்தை கொடுத்தது தர்பார் தான் என்றும், விஸ்வாசம், பிகில், பேட்ட படங்களின் வசூலைவிட தர்பார் வசூல் அதிகம் தான் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

தர்பார் படம் தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டுள்ளனர். ஆனால் உண்மையான வசூல் விபரத்தை படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டால் மட்டுமே இந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும்..

Next Story

மேலும் செய்திகள்