குரூப் 4 முறைகேடு - பல சந்தேகங்களை எழுப்பும் கல்வியாளர்கள்
குரூப்-4 முறைகேடு ஒப்புக்கொள்ளப்பட்ட நிலையில் அது குறித்து டி.என்.பி.எஸ்.சி மற்றும் சிபிசிஐடியின் அவசரகதியிலான விசாரணை அறிக்கைகள், கல்வியாளர்கள் மத்தியில் பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.
குரூப்-4 முறைகேடு குறித்து கடந்த ஐந்தாம் தேதி புகார் எழுந்த நிலையில், 18 நாட்களுக்குள்ளாக விரைந்து விசாரணை நடத்தி அதிரடி முடிவை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டது. ஒட்டுமொத்தமாக தேர்வை ரத்து செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை மட்டும் தகுதி நீக்கம் செய்ய திட்டம் இருப்பதாக கடந்த 20ஆம் தேதி தந்தி டிவியில் ஒளிபரப்பான செய்தி நேற்றைய டிஎன்பிஎஸ்சி அறிவிப்பிலும் எதிரொலித்தது.
தேர்வாணையத்தின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதாக இருந்தாலும், அதன் பின்னணியில் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. தேர்வு மைய பணிகளில் ஈடுபட்டவர்கள் உதவியோடு முறைகேடு நடந்திருப்பதாக அறிக்கையில் குறிப்பிட்ட டிஎன்பிஎஸ்சி செயலாளர் நந்தகுமார்,Card-6 அந்த அலுவலர்கள் விவரங்களை வெளியிடாதது ஏன் என ஐயம் எழுந்துள்ளது. குரூப்-4 முறைகேட்டில் ஈடுபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் உண்மை தகவல்கள் வெளியிடாதது ஏன்? முறைகேடு செய்தவர்களை நீக்கிவிட்டு, அடுத்த 39 பேர் சேர்க்கப்பட்டு உடனடியாக சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் பணி நியமன ஆணை வழங்கும் பணிகளில் டி.என்.பி.எஸ்.சி வேகம் காட்டுவது ஏன் என பல கேள்விகள் எழுகின்றன.
இதனிடையே விசாரணையை கையில் எடுத்து சிபிசிஐடி போலீசார், 3 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அதில், 2017ல் நடந்த குரூப்-2 ஏ முறைகேட்டில் திருக்குமரன் கைது செய்யப்பட்டிருப்பதும் குறிப்பிடப்பட்டது. அப்படியானால், குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்து விசாரணை நடத்தப்படும் என தேர்வாணையம் இதுவரை அறிவிக்காதது ஏன்? என கேள்வி எழுந்துள்ளது.
மேலும், 2017ல் ராமேஸ்வரம், கீழக்கரை தேர்வு மையங்களில் நடந்த குரூப்-2 ஏ தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் அதிக அளவில் அரசு பணிகளில் சேர்ந்திருப்பதாக குற்றச்சாட்டு நிலவும் நிலையில், திருக்குமரன் கைது மட்டும் பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. டிஎன்பிஎஸ்சியை போல், சிபிசிஐடியும், தனது அறிக்கையில், ராமேஸ்வரம், கீழக்கரையை தவிர தமிழகத்தில் வேறு எந்த மையங்களிலும் முறைகேடுகள் நடக்கவில்லை என தெளிவுப்படுத்தி இருப்பது, சந்தேகத்தை மேலும் அதிகரிக்க வைத்துள்ளது.
சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிந்து ஒரே நாளில் முடிவுக்கு வந்தது எப்படி என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது. குரூப்-4 தேர்வு முறைகேடு குறித்த இந்த வினாக்களுக்கு விடை கிடைக்குமா? முழு உண்மையும் வெளிச்சத்திற்கு வருமா என்பது கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ள ஐயம்.
எனவே இதை அனுபவமாக எடுத்துக் கொண்டு, எதிர்காலங்களில் முறைகேடு நடக்காமல் தவிர்க்க போட்டித்தேர்வு விதிமுறைகளை கடுமையாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. முறைகேட்டில் சம்பந்தப்பட்ட இடைத்தரகர்கள், அலுவலர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Next Story

