மல்லர்கம்ப கலைகளில் கலக்கி வரும் மாற்றுத்திறனாளிகள் - அரிய கலையில் அசத்தும் இளைஞர்கள்

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில், கை, கால் இல்லாத மாற்றுத்திறனாளிகள், பாரம்பரிய விளையாட்டான மல்லர்கம்ப கலையில் ஈடுபட்டு, காண்போரை வியப்பில் ஆழ்த்துகின்றனர்.
x
சிலம்பம், களரி, மல்யுத்தம், வர்மக்கலை போன்ற தற்காப்பு கலைகளின் வரிசையில் மல்லர்கம்பமும் பாரம்பரிய கலைகளில் ஒன்று. உடலையும், மனதையும் கட்டுப்படுத்த உதவும் மல்லர் கம்பமானது, இன்றளவும், மகாராஷ்டிரா, குஜராத் போன்ற வடமாநிலங்களிலும், பல்வேறு நாடுகளிலும் பிரபலமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் அபூர்வ கலைகளில் ஒன்றாகிவிட்ட இந்த விளையாட்டிற்கு விழுப்புரத்தை சேர்ந்த ஆதித்தன் என்பவர் உயிரூட்டி வருகிறார். இளைஞர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வரும் இவர், நடிகர் ராகவா லாரன்சிடம் பயிற்சி பெற்று நடனம் ஆடி வரும் மாற்றுத்திறனாளிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். கை கால்கள் நன்றாக இருப்பவர்களே செய்ய தயங்கும் இந்த கலையை ஐந்தே தினங்களில் கற்றதாக கூறுகிறார் ஒரு மாற்றுத்திறனாளி இளைஞர்.

இந்த கலையை கற்பதால் உடல் ஆரோக்கியத்துடன், நாள் முழுவதும் புத்துணர்வுடன் திகழ்வதாக கூறுகிறார் மற்றொரு மாற்றுத்திறளாளி இளைஞர்.

இந்த கலையை கற்பதன் மூலம், உடல் ஆரோக்கியத்துடன், மனதை ஒருமுகப்படுத்தும் ஆற்றலும் அதிகரிக்கும் என்பதால் மாணவர்கள் அனைவரும் இந்த கலையை கற்கலாம் என்கிறார் பயிற்சியாளர் ஆதித்தன்..

மன உறுதியும், தன்னம்பிக்கையும் இருந்தால், உடல் குறைபாடு ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ள இந்த மாற்றுத்திறனாளிகள் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கும் தன்னம்பிக்கை டானிக்குகள் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.


Next Story

மேலும் செய்திகள்