நீட் தேர்வு : சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம்

நீட் தேர்வு குறித்து சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம் நடைபெற்றது.
நீட் தேர்வு : சட்டப்பேரவையில் திமுக, அதிமுக இடையே காரசார விவாதம்
x
சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நீட்தேர்வு விவகாரத்தை கிளப்பினார். நீட்தேர்வு பிரச்சினைக்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டம் கூட்டப்படும் என முதல்வர் கூறியதும் என்ன ஆனது என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் கிராமப்புற மாணவர்களுக்கு அரசு இழைத்தது மாபெரும் துரோகம் எனவும் குற்றம் சாட்டினார். இதற்கு பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், நீட் தேர்வு எதிர்ப்பு என்ற கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது என்றும், நீட் தேர்வுக்கான விதையை 2010 ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி நாட்டில் விதைத்தது காங்கிரஸ்-  திமுக அரசுதான் என்றும் குற்றம் சாட்டினார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை, நீட்தேர்வு தலை காட்டவில்லை என்றும், அந்த விஷயத்தில் அவர் உறுதியாக இருந்ததால் அவரை பாராட்டுகிறேன் என்றார். ஆனால் அவர் மறைவுக்கு பின்னர் தான் நீட் தேர்வு வந்ததாகவும், இந்த பிரச்சினைக்கெல்லாம் அரசு தான் காரணம் என்றும் குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், பிள்ளையை கிள்ளி விட்டதும் இடையே தொட்டிலை ஆட்டியதும் திமுக, காங்கிரஸ் தான் என கூறியதோடு, 
தும்பை விட்டு வாலை பிடிக்கிறீர்கள் என தெரிவித்தார். மீண்டும் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், திமுக, காங்கிரஸ் கூட்டணியில் இருந்தாலும் நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தடை உத்தரவு வாங்கியதாக தெரிவித்தார். மேலும், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை நீட்தேர்வு வரவில்லை என்றும், இதன் பிறகுதான் நீட்தேர்வு வந்திருக்கிறது என்றும், இதற்கு அதிமுக அரசுதான் காரணம் என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். மீண்டும் பேசிய துரைமுருகன், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு ஆதரவு அளித்து விட்டு, தற்போது எதிர்ப்பு காட்டுவது போல் அதிமுக செயல்படுகிறது எனவும்,  தும்பை விட்டு வாலை பிடிப்பது நீங்களா? நாங்களா? என கேள்வி எழுப்பினார். இப்படியாக நீட் தேர்வு குறித்து பேரவையில் அதிமுக, திமுக இடையே 20 நிமிடங்களாக காரசாரமான விவாதம் நடந்தது.


Next Story

மேலும் செய்திகள்