தமிழக, கேரள எல்லையில் எரிசாராயம் கடத்தல் - மதுவிலக்கு போலீசார் அதிரடி சோதனை
தமிழக - கேரள எல்லையில் வாட்டர் கேன் சப்ளை போல் எரிசாராயம் கடத்திய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது
தமிழகம் - கேரளா இடையே எரிசாராயம் கடத்தப்படுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆந்திர, கர்நாடாக பகுதிகளில் இருந்து, எரிசாராய கேன்கள் கடத்தி வரப்பட்டு, அவை தமிழக - கேரள எல்லையான பொள்ளாச்சி பகுதியில் வீடுகளில் பதுக்கி வைக்கப்படுகிறது. போலீசாரின் நடமாட்டம் கண்காணித்து ,இந்த கேன்கள், நள்ளிரவில் கேரளாவிற்கு கடத்தப்படுகின்றன.
இது குறித்து வந்த தொடர் புகார்களை அடுத்து, கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார் , பொள்ளாச்சி ஜல்லிபட்டியில், தமிழ்முரசு என்பவரது வீட்டை சோதனையிட்டனர் அங்கு 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட 333 கேன்களில் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தின் மதிப்பு, 20 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது. தொடர்ந்து, வீட்டு உரிமையாளர் தமிழ்முரசை கைது செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தினர். இதில், கேரள மாநிலத்தை சேர்ந்த பிரபு மற்றும் சரவணன் என்ற இருவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வீடு வாடகைக்கு எடுத்து தங்கியதாகவும், அவர்கள் தண்ணீர் கேன் சப்ளை தொழில் செய்ததாக கூறியதாகவும் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் தலைமறைவாகியுள்ள பிரபு மற்றும் சரவணனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
எரிசாராயத்தை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் போது, தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Next Story