சாகித்ய அகாடமி விருது : ஆதிக்கம் செலுத்தும் தென்மாவட்ட எழுத்தாளர்கள்

எழுத்தாளர் சோ.தர்மனுக்கு சாகித்ய அகாடமி விருதுஅறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் தொடர்ந்து 10வது ஆண்டாக தென் மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் சாகித்ய விருது பெறுகின்றனர்
x
இருபத்தி நான்கு இந்திய மொழிகளில்,  சிறுகதை, நாவல், விமர்சனம் என சிறந்த இலக்கிய படைப்புகளுக்கு  தேசிய அளவில் சாகித்ய அகாடமி விருது அளிக்கப்படுகின்றன. 1955 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்மொழிக்காக சாகித்ய விருது அறிவிக்கப்பட்ட போது, முதன் முதலில் விருது பெற்ற ரா.பி சேதுப்பிள்ளை தொடங்கி, தற்போது வரை சாகித்ய விருது பெறுவதில் தென்மாவட்ட எழுத்தாளர்களே ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 1970,ல் கு. அழகர்சாமி, 1978 ல், வல்லிக்கண்ணன், 1983 ல் தொ.சி.ரகுநாதன், 1990 ஆம் ஆண்டில் சு.சமுத்திரம் என  திருநெல்வேலி மாவட்ட எழுத்தாளர்கள் முன்னோடிகளாக உள்ளனர். 1991ல், தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் இடைசெவலை சார்ந்த கி. ராஜநாராயணன் பெற்றார். 1994 ல், பெற்ற பொன்னீலனும், 1997ல் பெற்ற தோப்பில் முகமது மீரானும் நாகர்கோவிலை சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டில், நெல்லையைச் சேர்ந்த தி.க.சிவசங்கரன், 2001ல்  தேனியைச் சேர்ந்த சி.சு. செல்லப்பா, 2003ல் வைரமுத்து, 2006ல் மு.மேத்தா என அடுத்தடுத்து விருது பெற்றனர். 2008 ல். விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த மேலாண்மை பொன்னுச்சாமி விருது பெற்றார். அதன் பின்னர் 2010 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். 2010 ல், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த நாஞ்சில் நாடன்,  2011ஆம் ஆண்டில், தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரும் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சு. வெங்கடேசன் தேர்வாகினர். 2012 ல், திருநெல்வேலியைச்  சேர்ந்த டேனியல் செல்வராஜ், 2013 ல்,  நாகர்கோயிலை சேர்ந்த ஜோ டி குரூஸ், 2014 ல், கோவில்பட்டியை சேர்ந்த பூமணி ஆகியோர் பெற்றனர். திருநெல்வேலியைச் சார்ந்த ஆ. மாதவன் 2015 ஆம் ஆண்டிலும், வண்ணதாசன் 2016 ஆம் ஆண்டும் பெற்றனர். 2017 ல், ராமநாதபுரம் மாவட்டத்தில் பிறந்த எழுத்தாளர் இன்குலாப், 2018 ல், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர். தற்போது 2019 ஆம் ஆண்டுக்காக அறிவிக்கப்பட்டுள்ள சாகித்ய அகாடமி விருது, கோவில்பட்டியை சேர்ந்த தர்மருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 10 வது ஆண்டாக தென்மாவட்ட எழுத்தாளர்கள் சாகித்ய விருது பெற்று வருவதை இலக்கிய உலகம் கொண்டாடி வருகிறது.Next Story

மேலும் செய்திகள்