உள்ளாட்சி தேர்தல் : பல இடங்களில் ஊராட்சிமன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு

தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பல இடங்களில் ஊராட்சிமன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உள்ளாட்சி தேர்தல் : பல இடங்களில் ஊராட்சிமன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு
x
பெண்கள் வார்டில் ஆண்கள் வேட்புமனு தாக்கல் - ஒரு வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்திவைப்பு



ராசிபுரம் அருகே தேர்தல் அலுவலரின் அலட்சியத்தியத்தால் பெரப்பன் சோலை கிராமத்து பெண்கள் வார்டில் ஆண்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனை அடுத்து அந்த வார்டில் தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது. 

"எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல" - வியக்க வைக்கும் ஊர் மக்கள்





திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி ஊராட்சியில் வாக்காளர்களுக்கு பணம் தர வேண்டாம் என்று பொதுமக்களே விழிப்புணர்வு பதாகைகளை வைத்துள்ளனர். இது அனைத்து தரப்பினரின் வரவேற்பையும் பெற்றுள்ளது. 

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுத்ததாக புகார்


அதிமுக வேட்பாளர் மரணம் 


 

திருவாரூர் மாவட்டம், 11-வது வார்டு, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் வேட்பாளராக மன்னார்குடி ஒன்றியம் சேரன்குளம் அதிமுக கிளைச் செயலாளர் மகாலிங்கம் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வீட்டில் இருந்த மகாலிங்கம் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விடுத்ததாக புகார்



திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வலையூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு  ஏலம் விடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மண்ணச்சநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பரமேஸ்வரியின் கணவர் முருகன் பெயரில் பத்து லட்ச ரூபாய் ஏலம் விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, முருகன், ரெங்கராஜ், ஆனந்த் ஆகிய 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வார்டு உறுப்பினர் - 40 பேர் போட்டியின்றி தேர்வு 



கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த பதினைந்து ஊராட்சிகளில் உள்ள 132 வார்டு உறுப்பினர்கள் பதவிகளில் 40 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் பலர் தங்களது வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். .

ஊராட்சி மன்ற தலைவர் - 3 பேர் போட்டியின்றி தேர்வு 



திருவாரூர் மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவராக, அதிமுக பிரமுகர்கள் இருவர் உள்ளிட்ட 3 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.  மன்னார்குடி ஒன்றியம் வேட்டைத்திடல் கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அதிமுக வை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுபோல் வலங்கைமான் ஒன்றியம் தெற்கு பட்டம் ஊராட்சி மன்ற தலைவராக  என்.மாரியப்பன், திருவோணமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக சொக்கலிங்கம் என்பவரும் போட்டியின்றி  தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

ஊராட்சி தலைவர்கள் போட்டியின்றி தேர்வு 



மணப்பாறை அருகே 4  ஊராட்சித் தலைவர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். மணியங்குறிச்சி ஊராட்சிக்கு அம்மாக்கண்ணு என்பவரும், கொடும்பப்பட்டி  ஊராட்சிக்கு பழ. வேட்டை என்பவரும்,  அதிகாரம் ஊராட்சிக்கு துரைசாமி என்பவரும், உசிலம்பட்டி ஊராட்சிக்கு பொம்மாநாயக்கர் என்பவரும் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். 

5 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு



திருவண்ணாமலை ஒன்றியத்தில் 5 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் வந்தவாசியில்  2 ஒன்றிய கவுன்சிலர்கள் பேட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வந்தவாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் 10 மற்றும் 14ஆம் வார்டுகளில் போட்டியிட்ட அதிமுகவை சேர்ந்த ஜெயமணி ஆறுமுகம் மற்றும் அற்புதம் அர்ஜுனன் ஆகியோர் ஒன்றிய கவுன்சிலர்களாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


ஊராட்சி மன்றத் தலைவர் - போட்டியின்றி தேர்வு



ஈரோடு மாவட்டம் அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பச்சாம்பாளையம் ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு பானுமதி ராமச்சந்திரன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது ஆதரவாளர்கள் அந்தியூரின் பட்டாசு வெடித்தும் மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

17 பேர் போட்டியின்றி தேர்வு 



ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஊராட்சி ஒன்றியத்தில்17 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அச்சங்குளம், பாப்பாங்குளம், திம்மநாதபுரம், உள்ளிட்ட கிராமங்களில் ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 




Next Story

மேலும் செய்திகள்