திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா - கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்

திருவண்ணாமலையில் தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து, கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்து 24 மணி நேரமும் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை திருக்கார்த்திகை திருவிழா - கிரிவலப் பாதைக்கு கட்டணமில்லா பேருந்துகள் இயக்கம்
x
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் செய்வது குறித்து பக்தர்கள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பங்கேற்ற  ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.  ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், பக்தர்கள், ஆன்மீக தொண்டர்கள், வியாபாரிகள் மற்றும் முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். மாட்டு சந்தை, குதிரை சந்தை மற்றும் ஆங்காங்கே அமைக்கப்படும் தற்காலிக கடைகளில் சமூக விரோதிகள் கட்டாய பணம் வசூல் செய்வதாகவும், மாவட்ட நிர்வாகம் இதனை தடுக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று பக்தர்கள், வியாபாரிகள் ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து பேசிய ஆட்சியர்,  கட்டாய வசூலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் தனி கட்டுப்பாட்டு அறை  மற்றும் உதவி எண்ணை போலீசார் ஏற்படுத்த  உள்ளதாக தெரிவித்தார். அத்துமீறி சட்டத்துக்கு புறம்பாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கந்தசாமி தெரிவித்தார். தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து பக்தர்களை கிரிவல பாதைக்கு அழைத்து செல்ல 24 மணி நேரமும் கட்டணமில்லா பேருந்துகள் இயக்கப்படும் என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். கூடுதல் கட்டணம் செலுத்தி,  பக்தர்கள் பிற வாகனங்களில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று ஆட்சியர் கூறினார்.  இதற்கு பக்தர்கள் மற்றும் வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு இருந்தது. 


Next Story

மேலும் செய்திகள்