தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை
x
குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் - மக்கள் அவதி 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே கன மழையால், குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழைநீரை வெளியேற்றுவதற்கு வடிகால் வசதி இல்லாததால் சிறு மழை பெய்தாலும் வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துவிடுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கப்படாததால் தாங்கள் சிரமப்படுவதாக அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

பழவாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு  

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே பழவாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றங்கரைத்தெரு மற்றும் வடக்குத்தெருவில் உள்ள 30க்கும் மேற்பட்ட வீடுகளை ஆற்றுநீர் சூழ்ந்ததால் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழையின் காரணமாக காவிரி, பழவாறு, மஞ்சளாறு, வீரசோழன் ஆறு ஆகிய அனைத்து பாசன மற்றும் வடிகால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதேபோன்று மயிலாடுதுறை அருகே பூம்புகார்-கல்லணை சாலையில் மழைநீர் வடிகால் வசதி இல்லாததால் சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி நிற்கிறது. 


தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் அவதி 


திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தின் பின்புறம், நரிகுறவர் இன மக்கள் குடியிருக்கும் பகுதி முழுவதும் தண்ணீர் சூழ்ந்துள்ளது.  குடிசைகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகம்  மழைநீர் வெளியேற வடிகால் வசதி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

திருச்செந்தூர் அருகே கனமழையால் மரம் முறிந்து சாலையில் விழுந்தது

கனமழையால், திருச்செந்தூர் அருகே  மரம் முறிந்து சாலையில் விழுந்ததால், சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  திருச்செந்தூர் - நாகர்கோவில் செல்லும் சாலையில்,  இராமசாமிபுரத்தில்,  வீசிய பலத்த காற்றால், சாலையோரம் உள்ள மரம் முறிந்து விழுந்தது.  இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். 

கோவை சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்ததால், அங்கு போக்குரத்து நெரிசல் ஏற்பட்டது. கோவை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு பெய்து வந்த மழை, இரவு 8 மணி முதல் உக்கடம், காந்திபுரம், மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்த‌து. இதனால், அவிநாசி - திருச்சி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்