தமிழகம் முழுவதும் பரவலாக மழை

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
தமிழகம் முழுவதும் பரவலாக மழை
x
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மெரினா, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், மந்தவெளி, கிண்டி, வேளச்சேரி, தரமணி உள்பட பல  இடங்களில் அதிகாலை முதலே மழை வெளுத்து வாங்கி வருகிறது. சாலைகளில் மழைநீர் தேங்கியதால், வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனிடையே சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

செங்கல்பட்டு நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை முதல் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னல், காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் செங்கல்பட்டு, ஜி.எஸ்.டி. சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. பல்வேறு தெருக்களிலும் மழைநீர் தேங்கி நின்றது. மாமல்லபுரம், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், மறைமலை நகர், சிங்கப்பெருமாள் கோயில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பை, ஆட்சியர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்திலும், பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

திண்டுக்கலில் பலத்த மழை 

திண்டுக்கலில் சின்னாளப்பட்டி, செம்பட்டி, கள்ளிப்பட்டி, வடமதுரை உட்பட பல பகுதிகளில் பலத்த மழை பெய்தது. சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் திடீரென ஏற்பட்ட பெரிய பள்ளம் ஏற்பட்டது. போக்குவரத்து காவலரின் துரித நடவடிக்கையால்  தற்காலிகமாக மண் கொண்டு பள்ளம் மூடப்பட்டது. இதேபோல், மதுரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்  மழை பெய்தது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

ஈரோடு மாவட்ட பகுதிகளில் தொடர் மழை

ஈரோடு பகுதியில் காலை முதலே விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதே போல் பெருந்துறை, பவானி, கொடுமுடி, மொடக்குறிச்சி, அரச்சலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.

தஞ்சாவூர் தொடர் மழை - இயல்பு வாழ்க்கை பாதிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சுற்றுவட்டார பகுதிகளான ஆடுதுறை, திருபுவனம், திருப்பனந்தாள், பந்தநல்லூர், நரசிங்கன்பேட்டை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து  கனமழை பெய்து வருகிறது. இதனால் மூன்றாவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்தது. விடிய விடிய இடைவிடாது கனமழை பெய்து வருவதால் ஆங்காங்கே சாலைகளிலும் தண்ணீர் தேங்கியது. 

சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

சிதம்பரம் சுற்றுவட்டார பகுதிகளில் மூன்றாவது நாளாக கனமழை பெய்து வருகிறது. சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான முகையூர், குமராட்சி, மணலூர், அரசூர், வேலக்குடி, வல்லம்படுகை, லால்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. மூன்றாவது நாளாக நள்ளிரவில் இருந்து பலத்த  இடியுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக விடாமல் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கனமழை - சிவகங்கை பள்ளிகளுக்கு விடுமுறை

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பகுதியில் தொடர்ந்து மூன்று நாட்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனையொட்டி மாவட்ட நிர்வாகம் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. மேலும் சிவகங்கை மாவட்டத்தில் குறிப்பாக காரைக்குடியில் பகுதியில் அதிகமாக மழை பெய்து வருவதால் சாலைகளில் மக்களின் போக்குவரத்து மிகுந்த குறைவாகவே காணப்படுகிறது.

கனமழை- புதுக்கோட்டையில் பள்ளிகளுக்கு விடுமுறை

நாகை மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் விடிய விடிய கொட்டித் தீர்த்து வரும் கன மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதனிடையே கனமழை காரணமாக நாகை, காரைக்கால், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில், பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்