கிராமத்தில் இருந்து உருவாகிறார், பார்வையற்ற இளம் பாடகி

கடலூர் அருகே ஒரு சின்னஞ் சிறு கிராமத்தில் பிறந்த கண் பார்வையற்ற சண்முகப்பிரியா என்ற இளம்பெண், இனிய குரலில் திரைப்பட பாடல்களை பாடி, அசத்தி வருகிறார். இதுகுறித்து, அலசுகிறது, இந்த சிறப்பு செய்தித்தொகுப்பு
x
உடலில் குறைபாடு இருந்தாலும், உள்ளத்தில் உறுதி இருந்தால் எதனையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார், கண் பார்வை இல்லாத இளம் பாடகி சண்முகப்பிரியா. 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள பிள்ளையார் தாங்கள் என்ற இந்த அழகிய கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்தவர், இந்த சண்முகப்பிரியா. இவர் முறைப்படி சங்கீதம் கற்றதில்லை - ஏன், முறைப்படி ராகங்களும் கூட தெரியாது. ஆனால், பிரபல பின்னணி பாடகிகள் ஜானகி, சித்ரா உள்ளிட்டோரின் பாடல்களை, ஒரு முறை கேட்டால், அடுத்த நொடியே, மனதில் பதிவு செய்து, இனிமையான குரலில் பாடி, சண்முகப்பிரியா அசத்துகிறார்.

பிறந்தது முதல் இன்று வரை ஒளியை பார்க்காமல் இருளில் வாழ்ந்து வரும் சண்முகப்பிரியா, 15 வயது முதல், இனிய பாடல்கள் பாடி வருகிறார். தனது தாயாரின் ஊக்கமே, இந்த வெற்றிக்கு காரணம் என்கிறார், சண்முகப் பிரியா. 

தனது சோகங்களையும், வேதனைகளையும் மறக்க பாட ஆரம்பித்த சண்முகப்பிரியா, இப்போது, அப்பகுதி மக்களின் கவலைகளை போக்க, பாடி வருகிறார். வலியோடு வாழ்ந்து வரும் சண்முகப்பிரியாவுக்கு, தன்னம்பிக்கையும், வலிமையும் தருவது பாடல்கள் மட்டுமே என்கிறார், இவரது தாயார் சஸ்வதி.

கேள்வி ஞானத்தோடு மட்டுமே பாடி வரும் சண்முகப்பிரியா, ஒரு முறை பாடலை கேட்டாலே போதும், உடனடியாக எவ்வித பிழையும் இல்லாமல் மிகவும் நேர்த்தியாக பாடி, அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். 

சிப்பிக்குள் நல் முத்து இருப்பது போல, ஒரு சாதாரண  கிராமத்தில் பிறந்து, திறமையுடன் வலம் வரும் சண்முகப் பிரியா போன்றோருக்கு, திரைத்துறையில் வாய்ப்பு கொடுத்தால், ஒரு நல்ல பின்னணி பாடகி, தமிழகத்திற்கு கிடைப்பது நிஜம்.

Next Story

மேலும் செய்திகள்