உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் : மக்கள் நீதி மய்யம் சாதிக்குமா..? சறுக்குமா..?

நடிப்பில் மக்களை ஈர்த்த உலக நாயகன் கமல்ஹாசனின் அரசியல் பயணம் மற்றும் வியூகங்கள் குறித்து விவரிக்கிறது, இந்த தொகுப்பு...
உலக நாயகன் நடிகர் கமல்ஹாசனின் அரசியல் பயணம் : மக்கள் நீதி மய்யம் சாதிக்குமா..? சறுக்குமா..?
x
குழந்தை நட்சத்திரமாக திரையில் அறிமுகமான நடிகர் கமல்ஹாசன் உலக அளவில் உச்ச நடிகர் என்ற புகழை தனதாக்கியவர். புதிய முயற்சி, தொழில் நுட்பம் மூலம் தமிழ் சினிமாவின் எல்லையை அதிக உயரத்திற்கு கொண்டு சென்றவர் கமல்ஹாசன்.  சினிமாவில் இருந்து அரசியலுக்கு வர முடிவெடுத்த அவர் முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி டி.என்.சேஷன், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, மறைந்த முதலமைச்சர் கருணாநிதி, தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோரை அடுத்தடுத்து சந்தித்து பேசினார். தேர்தல் அரசியலில் பங்கேற்க முடிவு செய்த அவர் மறைந்த அப்துல்கலாம் இல்லத்துக்கு சென்றார். மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் பொதுக்கூட்டம் போட்டு  மக்கள் நீதி மய்யம் என்ற தனது கட்சியின் பெயரை அறிவித்தார்.  2018 பிப்ரவரி 21ஆம் தேதி நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றது தேசிய கவனத்தை ஈர்த்தது. கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கமல்ஹாசனுக்கு வாழ்த்துச் சொன்னார்.  கட்சி தொடங்கிய நேரத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் காகிதப் பூ மணக்காது என்றார். இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு நான் பூவல்ல விதை என கூறிய கமல் முளைத்து பூவாகி மணப்பேன் என பதிலளித்து களத்தில் குதித்தார். மக்களுடன்தான் கூட்டணி என அறிவித்த கமல்ஹாசன் நாடாளுமன்ற மற்றும் 22 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலை தனித்து சந்தித்தார். முதல் தேர்தலை சந்தித்த கமல் திமுக, அதிமுக உள்ளிட்ட யாரோடும் கூட்டணி வைக்காதது வியப்பளிக்க  ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோரை களமிறக்கி எதிர் வேட்பாளர்களை கதிகலங்கச் செய்தார். அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தின் போது சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஓர் இந்து அவர் பெயர் கோட்சே என கமல் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதிரடியாக கட்சியை தொடங்கி அனல் பறக்கும் பிரசாரம் செய்து  தனித்து நின்று தேர்தலை சந்தித்த கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளில் 3.72 சதவீதம் வாக்குகளை பெற்று பாரம்பரிய கட்சிகளின் கவனத்தை ஈர்த்தது. தமிழகத்தை  8 மண்டலங்களாக பிரித்து பொறுப்பாளர்களை நியமித்து வரும் கமல்ஹாசன் 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலை எதிர்நோக்கி காய்களை நகர்த்தி வருகிறார். எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா வரிசையில் திரைத் துறையில் வந்த கமல்ஹாசன் தசாவதார வித்தைகளுடன் தமிழகத்தில் வெல்வாரா என்பதை காலம் சொல்லும்.

Next Story

மேலும் செய்திகள்