நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள் : அவரது சகலகலா பயணம் ஓர் பார்வை

நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவோருக்கு எல்லாம் நடிகர் கமல்ஹாசன் ஒரு பல்கலைக்கழகம் போல தான்.
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள் : அவரது சகலகலா பயணம் ஓர் பார்வை
x
நடிகர் கமல்ஹாசனுக்கு இன்று பிறந்தநாள். திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வருவோருக்கு எல்லாம் நடிகர் கமல்ஹாசன் ஒரு பல்கலைக்கழகம் போல தான். இவரிடம் இருந்து இதை மட்டுமே கற்றுக் கொள்ள முடியும் என்பதை தாண்டி எல்லாமே இவரிடம் கற்கலாம் என்று சொல்லும் அளவுக்கு திறமைகளை ஒருங்கே பெற்ற மாபெரும் கலைஞன்.

1954 ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி பிறந்த கமல்ஹாசன், களத்தூர் கண்ணம்மா என்ற படத்தில்  குழந்தை  நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அவரது திரைப்பயணத்திற்கு அடித்தளமிட்ட படம் இதுவே. முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றார் கமல்ஹாசன்... பின்னர் திரையுலகில்  நடன இயக்குனராக அவதாரம் எடுத்தார்.. பல படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிய பிறகு , நடிக்கத் தொடங்கிய அவர் , தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்டார் 

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே திரைப்படம் கமலின் நடிப்பை உலகறியச் செய்தது. சிகப்பு ரோஜாக்கள், சட்டம் என் கையில், இளமை ஊஞ்சலாடுகிறது  என பல வெற்றிப் படங்களை தந்த அவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பன்மொழிகளிலும் திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 80களில் வாழ்வே மாயம், வறுமையின் நிறம் சிகப்பு, சலங்கை ஒலி, காக்கி சட்டை, புன்னகை மன்னன், அபூர்வ சகோதரர்கள், மூன்றாம்பிறை, நாயகன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தவர்.

படங்களில் நடிப்பது மட்டுமின்றி பின்னணி பாடகர், நடனம் என அனைத்திலும் தன்னை தனித்துவமாக காட்டியவர் இவர்.. தேவர் மகன், மகாநதி, இந்தியன் உள்ளிட்ட படங்களில் கமலின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. அவ்வை சண்முகி படத்துக்காக பெண் வேடத்தில் தத்ரூபமாக தன் நடிப்பை வெளிப்படுத்தியவர் கமல். சாதி மறுப்பு கொள்கையில் உறுதியான பற்று கொண்டிருந்த அவர், தனது படங்களின் மூலம் அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் தயங்கியதில்லை. குற்றங்களுக்கு ஒரு போதும் மரணதண்டனை தீர்வாகாது என்ற சிந்தனையை கொண்டவர் கமல் . இதேபோல், சமூகப் பிரச்சினைகள் குறித்தும், உரிய தருணத்தில் கருத்து தெரிவிக்கத் தவறியதில்லை.

ஆக்சன் படங்கள் மட்டுமின்றி நகைச்சுவை நடிகராகவும் சிறந்து விளங்கியவர் கமல்ஹாசன். தெனாலி, வசூல்ராஜா எம்பிபிஎஸ் போன்ற படங்களில் இவரது நகைச்சுவை பெரிதும் பேசப்பட்டது. தசாவதாரம் திரைப்படத்தில் 10 கதாப்பாத்திரங்களில் தோன்றி, ஒவ்வொரு கதாப்பாத்திரத்தின் குணாதிசயத்தையும், தனது அர்ப்பணிப்பான நடிப்பால் மிக நுணுக்கமாக வேறுபடுத்திக் காட்டினார். விஸ்வரூபம், உத்தம வில்லன், பாபநாசம் போன்ற படங்களும் கமல்ஹாசனின் திறமைக்கு சான்றுகளாக உள்ள படங்கள். 3 முறை தேசிய விருதுகள், சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதுகள், பிலிம் பேர் விருதுகள் என இவரது திறமைக்கு மணிமகுடம் சூட்டிய விருதுகள் ஏராளம்.

 எல்லோரையும் போல் கமல்ஹாசனுக்கும் நிறைவேறாத ஆசை உண்டு. அவரது கனவு திட்டமான மருதநாயகம் தான் அது. இங்கிலாந்து மகாராணி எலிசபெத் சென்னைக்கே வந்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தும் அந்த படம் அடுத்த கட்டத்தை நோக்கி நகரவில்லை. எம். ஜி. ஆர் , ஜெயலலிதாவுக்கு பின்னர் ரஜினியின் அரசியல் வருகை பற்றிய எதிர்பார்ப்புகளே நீண்டகாலமாக இருந்துவந்த நிலையில் அவரை முந்திக்கொண்டு, அரசியல் களத்தில் குதித்தார் கமல்ஹாசன்.

2018 ல் மக்கள் நீதி மய்யத்தை தொடங்கிய கமல், தமிழகம் முழுவதும் சென்று பலதரப்பட்ட மக்களை சந்தித்துப் பேசினார். அதன் விளைவாக, கட்சி தொடங்கி ஓராண்டே ஆன நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் சில இடங்களில் 3வது இடம் பிடித்து மக்களின்  கவனத்தை ஈர்த்தது அவரது மக்கள் நீதி மையம். மக்களிடம் தனக்கு கிடைத்த வரவேற்பை ஒரு நல்ல தொடக்கமாக எடுத்துக் கொண்ட கமல், 2021-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான கட்சிகளுக்கு கடும் போட்டியாக இருப்பேன் என்ற சபதத்துடன் அரசியல் களத்திலும் திரைத் தளத்திலும் ஒரு சேர பயணித்து வருகிறார். திரையுலகில் நம்மவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட கமல் அரசியல் உலகில் நம்மவராக மக்களால் ஏற்றுக் கொள்ளப் படுவாரா என்பதை காலம் சொல்லும் .

Next Story

மேலும் செய்திகள்