சுஜித் மரணத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பலியான குழந்தைகள்..

சுஜித்தின் மரணத்தால் ஏற்பட்ட காயம் ஆறுவதற்குள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தினம் தினம் பிஞ்சு குழந்தைகள் பலியாகிக் கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது..
x
பூமியில் கால் பதித்து தன் பிள்ளை எப்போது நடக்கும் என ஏங்கித் தவித்த ஒரு தாய், அதே பூமிக்கு தன் 2 வயது மகனை பறிகொடுத்தது பெரும் சோகம்... தாயின் அரவணைப்பில் இருக்க வேண்டிய சுஜித், மண்ணிலும், இருட்டிலும் உணவின்றி, காற்றின்றி பூமிக்கடியில் சிக்கி சிதைந்து போய் பலியான சோகம் இன்னும் நம் மனதை விட்டு அகலவில்லை. 

ஆனால் அடுத்தடுத்து ஒவ்வொரு நாளும் ஒரு குழந்தை பலியாவதாக வரும் செய்திகள் நம் மனதை உலுக்கிக் கொண்டிருக்கிறது. 

சுஜித் உயிரிழந்த அன்றைய தினமே தூத்துக்குடியை சேர்ந்த சஞ்சனா என்ற சிறுமியும் தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். இரண்டரை வயது சிறுமி, கழிவறைக்கு தனியாக சென்று தண்ணீர் எடுக்க முயன்றபோது தொட்டியில் இருந்த தண்ணீர் சிறுமியின் உயிரை குடித்திருக்கிறது... 

இதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே தரைமட்ட தண்ணீர் தொட்டியில் விழுந்த 10 மாத குழந்தை லோகேஷ், பரிதாபமாக உயிரிழந்தது. இந்த செய்தியும் நமக்கு இடியாகவே வந்து சேர்ந்தது. 

இந்த சம்பவமே ஒரு பாடமாக இருக்கும் என நினைத்தால் அன்றைய தினமே வந்து சேர்ந்தது மற்றொரு குழந்தையின் மரணச் செய்தி... விருதுநகர் மாவட்டம் ஒண்டிப்புலி நாயக்கனூரை சேர்ந்த 3 வயது சிறுவன் உத்ரன், வீட்டுக்கு அருகே இருந்த 4 அடி ஆழம் கொண்ட மழை நீர் சேகரிப்பு தொட்டியில் விழுந்து சடலமாக மீட்கப்பட்டான். 

அதேபோல் கடலூரை சேர்ந்த பவளவேணி என்ற இரண்டரை வயது குழந்தை கழிவுநீர் தொட்டிக்காக தோண்டப்பட்ட குழியில் இருந்த தண்ணீரில் விழுந்து மூச்சடைத்து மரணமடைந்தது. குழந்தையின் தாய், சிறுமியை வீட்டில் தனியாக விட்டு விட்டு போனது தான் இந்த மரணத்திற்கு காரணமாக சொல்லப்பட்டது.. 

சத்தியமங்கலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது நிலத்தில் தண்ணீரை சேமித்து வைக்க பண்ணை குட்டை ஒன்றை கட்டியுள்ளார். அதே குட்டையில் விழுந்த அவரது 4 வயது மகன் ஹர்ஷித் உயிரிழந்தது பெரும் சோகம். வீட்டிலிருந்து பல கிலோ மீட்டர் தூரம் கொண்ட அந்த பண்ணை குட்டைக்கு குழந்தை தனியாக சென்றதே மரணத்திற்கு காரணமாக சொல்லப்பட்டாலும் இங்கு பெற்றோரின் அலட்சியமும் பிரதான காரணம்..

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஒரு சம்பவம் அடுத்த அதிர்ச்சியை நமக்கு தந்திருக்கிறது. திண்டுக்கல் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த ஒன்றரை வயது குழந்தை பிரசாந்த், வீட்டின் முன் விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், அந்த சிறுவன் அங்கிருந்த தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். 

வாழ வேண்டிய இந்த பிஞ்சு குழந்தைகள் எல்லாம் மொட்டிலேயே மூச்சடைத்து போக காரணம் நிச்சயம் அவர்கள் இல்லை.. பெற்றோரின் அலட்சியமும், அஜாக்கிரதையாக கையாள்வதும் தான் குழந்தைகளின் மரணத்திற்கு காரணம் என்ற கருத்தும் இங்கே முன்வைக்கப்படுகிறது. 

குழந்தைகளை எந்த குறையுமின்றி வளர்ப்பதே பெரும்பாலான பெற்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது. பிள்ளைகள் சுயமாக சிந்திக்கும் வரை அவர்களை தங்கள் கண்காணிப்பில் பார்த்துக் கொள்ள வேண்டியது நிச்சயம் பெற்றோரின் கடமையும் கூட..  

Next Story

மேலும் செய்திகள்