மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
மாலை 6 மணியுடன் ஓய்கிறது தேர்தல் பிரசாரம்
x
நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நீடித்த அனல் பறந்த இடைத்தேர்தல் பிரசாரம், இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியிலும் மாலையுடன் பிரசாரம் ஓய்வதால் வேட்பாளர்கள், இறுதிக்கட்ட ஓட்டு வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் அதிமுக சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சியின் ராஜநாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதேபோல, விக்கிரவாண்டி தொகுதியில், அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வன், திமுக சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி, சினிமா இயக்குநர் கவுதம் உள்பட 12 பேர் களத்தில் உள்ளனர். புதுச்சேரி - காமராஜ் நகர் தொகுதியில் காங்கிரஸ் - என். ஆர். காங்கிரஸ் இடையே கடும் போட்டி உருவாகி உள்ளது.

அதிமுகவுக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் , பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் இளைஞர் அணி செயலாளர் டாக்டர் அன்புமணி, த.மா. கா தலைவர் ஜி.கே. வாசன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்ட தலைவர்களும் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் மற்றும் திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக,  மு.க. ஸ்டாலின், உதயநிதி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, நடிகை குஷ்பு உள்ளிட்டோர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். கடந்த 2 வாரத்திற்கும் மேலாக நீடித்த தேர்தல் பிரசாரம் மாலை 6 மணிக்கு நிறைவு பெறும். ஓட்டுப்பதிவு 21 ம் தேதியும், வாக்கு எண்ணிக்கை 24 ம் தேதியும் நடைபெறும். இதனிடையே,இவ்விரு தொகுதிகளிலும் தங்கியிருக்கும் வெளியூர்க்காரர்கள், மாலைக்குப்பின் உடனடியாக வெளியேற வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ உத்தரவிட்டு உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்