திருச்சி அருகே நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகளை பெங்களூரு போலீசார் தோண்டி எடுப்பு

திருச்சி அருகே நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகளை பெங்களூரு போலீசார் தோண்டி எடுத்தனர். இது, திருச்சி நகைக்கடையில் கொள்ளை அடிக்கப்பட்டவையா என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.
திருச்சி அருகே நிலத்தில் புதைக்கப்பட்டிருந்த 11 கிலோ நகைகளை பெங்களூரு போலீசார் தோண்டி எடுப்பு
x
திருச்சி நகைக்கடை கொள்ளையில் மூளையாக செயல்பட்ட திருவாரூர் சீராத்தோப்பு முருகன், கடந்த 11ம் தேதியன்று பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடைந்த போது, அவர் மீது பெங்களூரு காவல் நிலையங்களில் வழக்குகள் இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது. 

முருகனை பொம்மனஹள்ளி போலீசார், காவலில் எடுத்து விசாரித்தபோது, புதையல் போல பகீர் தகவல்கள் வெளியாகின. அதில் ஒன்று, திருட்டு நகைகளை தமிழகத்தின் திருவெறும்பூர் பகுதியில் புதைத்து வைத்திருந்த தகவல். உடனே, தமிழகம் விரைந்த பெங்களூரு போலீசார். திருவெறும்பூர் பூசத்துறை காவிரி ஆற்றுப்படுகையில், புதைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம், வைரம், பிளாட்டினம் நகைகளை தோண்டி எடுத்தனர்.  மொத்தம் 11 கிலோ 317 கிராம் தங்கம், 541 புள்ளி 57 கிராம் வைரம், 37 புள்ளி 79 கிராம் பிளாட்டினம் என நகை குவியல்கள் சிக்கியதோடு ஒரு காரும் பறிமுதல் செய்யப்பட்டது. புதையல் போல சிக்கிய இந்த நகைகளை பெங்களூரு மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் கர்நாடக போலீசார் காண்பித்தபோது, மினி நகைக்கடை போலவே காணப்பட்டது. 

முருகனிடம் கர்நாடக போலீசார் தொடர்ந்து விசாரித்தபோது, திருச்சி பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் ஆந்திராவில் சில வங்கிகளிலும் கைவரிசை காட்டியது தெரிந்தது. தமிழக போலீசார் வசம் இருக்கும் சுரேஷ், கணேஷ் இருவருக்கும் கூட, இதில் பங்கு இருக்கலாம் என பெங்களூரு போலீசார் சந்தேகிப்பதால் அவர்களையும் கர்நாடகாவுக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்துள்ளர்.  இதற்கிடையே, திருவெறும்பூரில் புதையல் போல சிக்கியது, திருச்சி நகைக்கடையின் நகைகள் என தமிழக போலீசார் கூற, உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் அளித்து பெற்றுக் கொள்ளலாம் என பெங்களூரு போலீசார் பதிலளித்துள்ளனர். இதனால், போதுமான சான்றுகளுடன்  புதனன்று  காலை, பெங்களூருவுக்கு செல்கின்றனர், திருச்சி தனிப்படை போலீசார். அங்கு, நீதிமன்றத்தில் ஆவணங்களை காட்டி, பதினொன்றரை கிலோ நகைகளை மீட்டு வர திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில்,  முருகனை தமிழகம் அழைத்து வந்து விசாரிக்கவும் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என பெங்களூரு கூறியுள்ளனர். ஆக... கர்நாடகாவில் இருந்து நகைகளும் முருகனும் தமிழகம் வருவது, தற்போது நீதிமன்றத்தின் கைகளில் இருக்கிறது. 

Next Story

மேலும் செய்திகள்