விக்கிரவாண்டி தொகுதியில் திமுக VS அதிமுக : பலம் என்ன? பலவீனம் என்ன?

இடைத்தேர்தலுக்கு தயாராகிவரும் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக , அதிமுகவின் பலம் மற்றும் பலவீனம் என்ன? இரு கழகங்களின் சார்பிலும் தளபதியாக நின்று போருக்கு வழிகாட்டப் போவது யார்?
x
அதிமுகவை பொறுத்தவரை, விக்ரவாண்டி தொகுதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் தான் தளபதியாக நின்று முக்கிய பங்காற்றுகிறார் என்கிறார்கள் அந்த மாவட்ட அதிமுகவினர். தொகுதியில் மக்களால் அதிகம் காணகூடிய அரசியல் பிரமுகராக வலம் வருகிறார் அமைச்சர் சி.வி.சண்முகம். இவரது நடவடிக்கையால், இங்கு பெருமளவு குடிநீர் பிரச்சினை தீர்க்கப்பட்டுள்ளது  என்பதும் ஒரு பகுதி மக்கள் நன்றி கூறுகின்றனர். அதேபோல சில இடங்களில், சாலை வசதியும் பெற்றுத்தந்து  மக்களின் நன்மதிப்பை பெற்றிருக்கிறார் சி.வி.சண்முகம். இது தவிர இந்த தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான பா.ம.கவின் ஓட்டு விகிதம் விக்ரவாண்டி தொகுதியில் கணிசமாக உள்ளது. இதுவும் அதிமுகவின் மிகப்பெரிய பலமாகவே பார்க்கப்படுகிறது. 

பலவீனமாக பார்க்கப்படுவது, இதற்கு முன்பு அதாவது 2011 ஆம் ஆண்டுமுதல் 2016 வரை அதிமுகவின் கூட்டணி கட்சியாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விக்ரவாண்டி தொகுதியை வசப்படுத்தியிருந்த‌து. இப்போது அந்த கட்சி அதிமுக கூட்டணியில் இப்போது இல்லாததும் ஒரு பலவீனமாக பார்க்கப்படுகிறது. இருந்தபோதும், களப்பணியாளராக அதிமுகவினரால் அறியப்பட்டுள்ள சி.வி. சண்முகம் எந்த சவாலையும் சந்தித்து கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வார் என்பது அந்த கட்சியினரின் நம்பிக்கை 

விக்ரவாண்டி தொகுதியில் திமுகவை பொறுத்தவரை, முன்னாள் அமைச்சர் பொன்முடியே  தளபதியாக நின்று  முக்கிய பங்கு வகிக்கிறார். 2010 ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கொண்டுவரப்பட்டது, இதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர் அப்போதைய அமைச்சர் பொன்முடிதான்... தற்போது திருக்கோவிலூர் எம்.எல்.ஏவாக உள்ள பொன்முடி விக்ரவாண்டி தொகுதியின் பல்வேறு கிராமங்களுக்கு சென்று செயல்வீர‌ர்கள் கூட்டம் நடத்தியுள்ளார்.  அங்கு மக்களை நேரடியாக சந்தித்து, அவர்களின் குறைகளை அரசுக்கு கொண்டு சென்று தீர்வு காண முயலும் பொன்முடியின் செயல்பாடுகளுக்கு, நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது என்றே கூற வேண்டும்... 

கடந்த முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுகவை சேர்ந்த ராதாமணி  தொகுதிக்கு பெரிதாக எதுவும் செய்ய வில்லை என்ற புகாரும் உள்ளது .. இது அந்த கூட்டணிக்கு இதுவே பலவீனமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் மாவட்ட திமுகவை கைக்குள் வைத்து ராஜாங்கம் செய்யும் பொன்முடி அந்த பிரச்சனைகளை தீர்த்து வைத்து வெற்றிக்கு வழிவகுப்பார் என்பது அந்த கட்சியினரின் திடமான நம்பிக்கை மேம்பாலம், தீயணைப்பு நிலையம், தொழிற்சாலைகள் விவசாயம் சார்ந்த எந்த ஒரு வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை என்ற குறைபாடு பல ஆண்டுகாலமாக விக்ரவாண்டி மக்களின் வேதனையாக உள்ளது. பலம், பலவீனங்களை கடந்து, எந்த கட்சி வெற்றி பெற்றால், இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்பதை சிந்தித்த படியே வாக்கு செலுத்த கைவிரலுக்கு பட்டை தீட்டி கொண்டிருக்கின்றனர் விக்ரவாண்டி தொகுதி மக்கள்... 

Next Story

மேலும் செய்திகள்