டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 84-வது பிறந்த நாள் : அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை - புகழாரம்

பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 84 ஆவது பிறந்த நாளையொட்டி, அவரது உருவ படத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 84-வது பிறந்த நாள் : அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மரியாதை - புகழாரம்
x
பத்திரிகை உலகில் சாதனைகள் படைத்த பத்மஸ்ரீ  டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் 84 ஆவது பிறந்த நாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி   சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நினைவு இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரது உருவ படத்திற்கு 
தினத்தந்தி குழும நிர்வாக இயக்குனர் சி. பால சுப்பிரமணிய ஆதித்தன், மாலைமலர் இயக்குனர் பா. சிவந்தி ஆதித்தன், தந்தி டி.வி இயக்குநர் ஆதவன் ஆதித்தன் மற்றும் குடும்பத்தினர் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தினர். 

அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ,  திமுகவை சேர்ந்த சிம்லா முத்துசோழன், காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன், பா.ம.க தலைவர் ஜி.கே.மணி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , பாஜகவை சேர்ந்த அரசகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் வன்னிஅரசு, சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களும், தொழிலதிபர்களும், வணிகர் சங்க நிர்வாகிகளும், முக்கிய பிரமுகர்களும் , நாடார் சங்க பிரமுகர்களும் , பத்மஸ்ரீ  டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாரின் உருவபடத்திற்கு மரியாதை செலுத்தினர். 

அமைச்சர் ஜெயக்குமார்- சரத்குமார் அஞ்சலி

சென்னையில் பத்ம ஸ்ரீ டாக்டர்.சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு மலர் வளையம் வைத்து அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், காங்கிரஸ் எம்.பி. ஹெச் வசந்த குமார் உள்ளிட்டோரும் சிவந்தி ஆதித்தனார் உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நாடார் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில் ஏழை எளியவர்களுக்கு தையல் மிஷின் , லேப்டாப் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாணவர்கள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நலத்திட்ட உதவிகள் மற்றும் பரிசுகளை தினத்தந்தி குழும நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன் வழங்கினார்.

சென்னை கேகே நகரில் பனங்காட்டு படை கட்சி மற்றும் நியூ ஹோப் மருத்துவமனை இணைந்து ஏற்பாடு செய்த மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று உடல் பரிசோதனை செய்து கொண்டனர். நெல்லை, தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கம் சார்பில் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். தோட்டத்தில் சிவந்தி ஆதித்தனாரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அங்குள்ள காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாத மாணவ, மாணவிகளும் மரியாதை செலுத்தினர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.



Next Story

மேலும் செய்திகள்