அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி: "மோசடி செய்தவனுக்கு மரண தண்டனை கொடுங்கள்"- இறந்த கார்த்திக்கின் தாயார் வேண்டுகோள்

கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கணவன், மனைவிக்கு விஷம் கலந்த பிரசாதத்தை கொடுத்த விவகாரத்தில் வேலாயுதத்திற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று இறந்த கார்த்திக்கின் தயார் தெரிவித்துள்ளார்.
x
சென்னை காசிமேட்டை சேர்ந்த கார்த்திக், ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தார். இவருக்கு சரண்யா என்கிற மனைவியும், சர்வேஷ், சர்வின் என்ற இரு மகன்களும் உள்ளனா். 

கார்த்திக் சுமார் 4 வருடத்திற்கு முன்பு எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள வேலாயுதம் என்பவரிடம் அரசு வேலைக்காக 4 லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். ஆனால் வேலாயுதம் அரசு வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி தராமல் ஏமாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று கார்த்திக்கிடம் அரசு வேலைக்கான நியமன கடிதம் வந்துள்ளதாகவும், அதை நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் வேலாயுதம் கூறியுள்ளார். இதையடுத்து கார்த்திக் தனது மனைவி சரண்யாவுடன் எம்.கே.பி நகர் பகுதியில் உள்ள வேலாயுதம் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது வேலாயுதம். ஷீரடி சாய்பாபா பிரசாதம் என்று கூறி ஒரு பொடியை கார்த்திக் மற்றும் சரண்யாவுக்கு கொடுத்து சாப்பிட கூறியுள்ளார். 

முதலில் கார்த்திக் சாப்பிட்ட நிலையில் அவருக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனே கார்த்திக் பொடியை சாப்பிட்டு கொண்டிருந்த சரண்யாவை சாப்பிட வேண்டாம் என்று கூறி, அங்கிருந்து தனது இருசக்கர வாகனத்தில் அவர்கள் புறப்பட்டுள்ளனா். அங்கிருந்து முல்லை நகர் பேருந்து நிலையம் அருகே வந்தபோது கார்த்திக் வாகனத்தை நிறுத்திவிட்டு மயங்கி விழுந்துள்ளார். சரண்யாவுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக , இருவரையும் ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

இதில் சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். சரண்யா தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எம்.கே.பி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். சரண்யாவிடம் விசாரித்த போது தான், மேற்கண்ட சம்பவங்கள் குறித்து போலீசாருக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து வேலாயுதம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர் கிண்டியில் உள்ள ஆய்வகத்தில் பணிபுரிந்தவர் என்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் கார்த்திக்கின் பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம், அவரது உடலில் சல்பியூரிக் ஆசிட் பவுடர் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் வேலாயுதத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 
இந்நிலையில் வேலாயுதத்திற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கார்த்தின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கணவன், மனைவியை கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மேலும் செய்திகள்