கிராம மக்கள் கண்முன்னே, தீயில் எரிந்த மாமியார், மருமகள் - பெரம்பலூரில் பரபரப்பு சம்பவம்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே, கிராம மக்கள் கண்முன்னே மாமியார், மருமகள் இருவரும் தீக்குளித்த சம்பவமும், பி.டி.ஓ. உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
x
அல்லிநகரம் ஊராட்சியைச் சேர்ந்த மேலஉசேன்நகரம் பகுதியில், சீமான்குளக்கரையின் பின்புறம், 25 ஆண்டுகளாக குடும்பத்துடன் வசித்து வருபவர் ராமதாஸ். அவரின் வீட்டுக்கு செல்லும் அரசு இடமான குளக்கரையில், ஆழ்துளை கிணறு அமைத்து, மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது. அப்போது, சுற்றுச்சுவர் எழுப்பியதால், வீட்டுக்கு வரும் பாதை தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதைகோரி, 2006 ஆம் ஆண்டு ராமதாஸ் குடும்பம் வழக்கு தொடர்ந்த நிலையில், பாதையை தடுக்கக் கூடாது என்றும், அதை அமைத்துக் கொடுக்குமாறும் 2017ஆம் ஆண்டு நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, பழுதான ஆழ்துளை மோட்டரை சீர்செய்தும், உள்ளே இருந்த புதர்களை நீக்கியும் கிராமத்தினர் பணி செய்துகொண்டிருந்தனர். இதை எதிர்த்து, சத்தமிட்டவாறே சம்பவ இடத்துக்கு வந்த ராமதாஸின் மனைவி பூங்கொடி, திடீரென தீக்குளித்தார்.

முன்னதாக, மோட்டர் அமைக்க எதிர்ப்பு தெரிவிப்பதாக, ஊராட்சி செயலர், காவல் நிலையத்தில் புகாரளித்திருந்தார். தனி நபர் ஒருவரின் எதிர்ப்பால், கிராமத்துக்கு தண்ணீர் வழங்குவதை நிறுத்தக் கூடாது என ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, மோட்டர் பொருத்தும் பணியின் போது, பூங்கொடி தீ வைத்துக் கொண்டார். காப்பாற்றச் சென்ற அவரது மருமகள் தங்கலட்சுமியும் தீயில் சிக்கினார். பூங்கொடி உயிரிழந்த நிலையில், பி.டி.ஓ., ஊராட்சி செயலர், உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்... இதனிடையே, பூங்கொடியின் இறுதிச் சடங்குக்கு வந்த உறவினர்கள், சர்ச்சைக்கு உள்ளான சுற்றுச் சுவரை அடித்து நொறுக்கியுள்ளனர். உண்மை எது, நியாயம் யார் பக்கம் என்பது ஒருபக்கம் இருக்க, ஊரார் கண்முன்னே பெண் ஒருவர் தீயில் கருகியது அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்