"சுபஸ்ரீ விவகாரம் : நியாயம் கிடைக்க ஹேஷ்டேக் போடுங்கள்" - அனல் பறந்த விஜய்யின் அரசியல் பேச்சு

யாரை எங்கு உட்கார வைக்க வேண்டுமோ அங்கு உட்கார வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
x
அட்லீ இயக்கத்தில் விஜய்- நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள 'பிகில்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தாம்பரத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதை பார்க்க அதிக அளவில் திரண்ட ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீசார் தடியடி நடத்தினர். நாலாபுறமும் ரசிகர்கள் சிதறி ஓடியதால், இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. என் பேனரை கிழியுங்கள், போட்டோவை உடையுங்கள்... ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார். 

பேனர் விழுந்ததால் இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில், ஓட்டுநர், அச்சகம் மீது பழி போடப்படுவதாக விஜய் குற்றம்சாட்டினார். சுபஸ்ரீ விவகாரத்தில் நியாயம் கிடைக்கும் வரை டுவிட்டரில் ஹேஷ்டேக் போட்டால் நன்றாக இருக்கும் என்றார். 

இணைய மோதலில் ஈடுபடக் கூடாது என ரசிகர்களுக்கு அறிவுறுத்திய விஜய், கருணாநிதி பற்றி தவறாக பேசியதற்கு தனது சொந்த அமைச்சரையே எம்ஜிஆர் திட்டியதாக குட்டிக்கதையை உதாரணமாக சொன்னார். 

எதிரியாக இருந்தாலும் மதிக்க வேண்டும் என குறிப்பிட்ட நடிகர் விஜய், சமூக பிரச்சினைகளுக்கு குரல் எழுப்புவதற்காக வலைதளங்களை பயன்படுத்துங்கள் என ரசிகர்களைக் கேட்டுக்கொண்டார்.

வாழ்க்கை கூட ஒரு கால்பந்து விளையாட்டுதான். நாம் கோல் போட முயற்சிக்கும் போது, அதனை தடுப்பதற்கு ஒரு கூட்டம் வரும். நம்முடன் இருப்பவர்கள் சேம் சைடுல கோல் போடுவார்கள் என்றும் விஜய் குறிப்பிட்டார். அரசியலில் புகுந்து விளையாடுங்கள். ஆனால், விளையாட்டில் அரசியல் பார்க்காதீர்கள் என்றும் பேசினார் விஜய்.

யாரை எங்கு உட்கார வைக்கணுமோ…. அவர்களை அங்கு உட்கார வைத்தால் நல்லா இருக்கும் என விஜய்யின் பேச்சில் அரசியலும் அனல் பறந்ததால் ரசிகர்கள் விசில் அடித்தும், கர ஓசை எழுப்பியும் வரவேற்பு தெரிவித்தனர். 

Next Story

மேலும் செய்திகள்