மின்கம்பியை மிதித்து 14 வயது சிறுவன் பலி : சிடிவியில் பதிவான காட்சிகள் வெளியீடு

சென்னை முகலிவாக்கத்தில், மின் கம்பி மிதித்து 14 வயது சிறுவன் உயிர் இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
சென்னை முகலிவாக்கத்தில் தெருவிளக்கு மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட குழிகள், தற்காலிகமாக மணல் நிரப்பி மூடப்பட்டுள்ளது. மழை பெய்ததால், அதில் புதைக்கப்பட்டிருந்த மின்சார கம்பி நீட்டி கொண்டிருந்தது. அந்த வழியாக வந்த தீனா என்ற சிறுவன் மின் கம்பியை மிதித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஆத்திரம் அடைந்த உறவினர்கள் சிறுவனின் உடலை சாலையில் வைத்து, மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. 

வேளச்சேரி தம்பதி, கொடுங்கையூர் சிறுமிகளை போன்று தற்போது மின் கம்பிக்கு முகலிவாக்கம் தீனாவின் உயிரும் பலியாகி உள்ளது. இதற்கு அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என குற்றம்சாட்டும் பொதுமக்கள், மின் விபத்துகளை தடுக்க, பூமிக்கடியில் புதை வட மின்கம்பிகள் அமைக்கும் பணிகள் நிலவரம் என்ன என கேள்வி எழுப்பியுள்ளனர். சமீபத்தில், சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்த விபத்தில் இளம்பெண் சுபஸ்ரீ இறந்த அதிர்ச்சி இன்னும் நீங்காத நிலையில், மீண்டும் ஒரு சம்பவம் முகலிவாக்கத்தில் அரங்கேறியுள்ளது. 

மகனை பறிக்கொடுத்த சோகத்தில் மூழ்கிய தீனாவின் பெற்றோர், மாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். சாலையோரத்தில் பள்ளம் தோண்டி மூடாமல் அலட்சியத்துடன், கவனக்குறைவாக செயல்பட்ட மாநகராட்சி ஊழியர்கள், மின்வாரிய ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதனிடையே, மின்சாரம் பாய்ந்து சிறுவன் இறந்த போது, சிசிடிவி கேமிராவில் பதிவான காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்