எமனாக அமைந்த பேனர்... சிதைந்த அழகிய மலரின் கனவு

சாலை விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் உடல், சென்னையில் தகனம் செய்யப்பட்டது.
x
சாலை விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீயின் உடல், சென்னையில் தகனம் செய்யப்பட்டது. முன்னதாக, குரோம்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த சுபஸ்ரீயின் உடலுக்கு, அவரது உறவினர்களும், நண்பர்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். இதற்கிடையே, சுபஸ்ரீயின் உயிரை பறித்த விபத்து காட்சி, வெளியாகி உள்ளது.

சென்னை இளம்பெண் சுபஸ்ரீயின் விபத்து, நாடு தழுவிய அளவில் கடும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கி உள்ளது. வெளிநாட்டு வேலைக்கு தயாராகி வந்த 23 வயது சுபஸ்ரீக்கு, காற்றில் ஆடிய ஒரு பேனரும், அதி வேகமாக வந்த தண்ணீர் லாரியும் எமனாக அமைந்தன. நெஞ்சை பதற செய்யும் இந்த விபத்து காட்சி, தற்போது வெளியாகி உள்ளது. பணி முடிந்து, வீடு திரும்பிய போது, பள்ளிக்கரணை பகுதியில் நிகழ்ந்த விபத்தில் சிக்கி, உயிரிழந்த சுபஸ்ரீயின் உடல்,  நடுரோட்டில்,சுமார் 2 மணி நேரம் கிடந்தது. ஆம்புலன்சுக்கு பதிலாக சரக்கு வாகனத்தில் சுபஸ்ரீ யின் உடல், ஏற்றி செல்லப்பட்ட காட்சி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம் - தனியார் மழலையர் பள்ளியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில், சுபஸ்ரீயின் நண்பர்கள் கலந்து கொண்டு, மெழுகு வர்த்தி ஏற்றி, கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். எதிர்காலத்தில் உயிரிழப்புகளை தடுக்க, தமிழகத்தில் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என சுபஸ்ரீயின் நண்பர்கள் வலியுறுத்தினர். பேனரால், ஒரே மகளை இழந்த சுபஸ்ரீயின் தந்தையிடம் அவரது உடல், பிரேத பரிசோதனைக்குப் பின் ஒப்படைக்கப்பட்டது. விலா எலும்பு நொறுங்கி, சுபஸ்ரீயின் நுரையீரல் பாதிக்கப்பட்டதாகவும், கல்லீரல் கிழிந்ததால் உயிரிழப்பு நிகழ்ந்ததாகவும் குரோம் பேட்டை அரசு மருத்துவமனையின் மருத்துவ குழு, வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது .  

பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின், சுபஸ்ரீயின் உடல் தகனம் செய்யப்பட்டது. சட்ட விரோதமாக வைக்கப்பட்ட பேனர், ஒரு அழகிய மலரின் வெளிநாட்டு கனவை சிதைத்து விட்டது. தமிழகத்தில், கட் - அவுட், போஸ்டர் மற்றும் பேனர் கலாச்சாரத்திற்கு நிரந்தரமாக தீர்வு எட்டப்பட்டால் மட்டுமே, இனி, எதிர்காலத்தில், இன்னுமொரு சுபஸ்ரீ உருவாக மாட்டார்.

Next Story

மேலும் செய்திகள்