செல்போன் சிக்னல் மூலம் சிக்கிய பிரபல கொள்ளையன்

கோவையில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட பிரபல கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமியை, செல்போன் சிக்னலை வைத்து போலீசார் கைது செய்துள்ளனர்.
x
கோவை உள்பட தமிழகம் முழுவதும் பேருந்துகளில் மட்டும் நகை, பணத்தை நூதன முறையில் திருடும் கும்பல் போக்குக் காட்டி வந்தது. தடயமும், ஆதாரமும் சிக்காத நிலையில், திருடனை பிடிக்க முடியாமல் கோவை போலீசார் திணறினர். இதில், ருசிகரம் என்னவெனில், ஒரு ரூபாய் நாணயத்தைச் சுண்டி, மற்றவர்களை திசை திருப்பும், ஒரு கும்பல் உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக உதவி ஆணையர் பெருமாள், இன்ஸ்பெக்டர்  விவேகானந்தன், எஸ்.ஐ. மாரிமுத்து, கார்த்தி உள்ளிட்ட 10 போலீசார் கொண்ட தனிப்படை அமைத்து தேடிவந்தனர். இதில், நாணயத்தை சுண்டிவிட்டு கொள்ளையில் ஈடுபடும் திருடனின் கைவரிசை காட்சி, பேருந்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

இதை ஆய்வு செய்த போலீசார், பிரபல பேருந்து கொள்ளையன் மலைச்சாமியை அடையாளம் கண்டனர். அவன் மீது 25க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதும், 2 முறை குண்டர் சட்டத்தில் கைதானவன் என்பதும் தெரியவந்தது. தலைமறைவான அவனை, செல்போன் எண் மூலம் தேடியதில், சென்னை திருவேற்காட்டில் பதுங்கியிருந்தது அம்பலமானது. பேருந்து கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமியை, துணை ஆணையர் பெருமாள் தலைமையில் மாரிமுத்து, கார்த்திக் உள்ளிட்ட 10 தனிப்படை போலீசார் பின்தொடர்ந்து சென்று, அவனை மடக்கி பிடித்தனர்.

கோவை கொண்டு செல்லப்பட்ட திருடன் மலைச்சாமி, திருடிய நகைகளை உருக்கி வைத்திருந்த ஒரு கிலோ தங்க கட்டியை போலீசார் பறிமுதல் செய்தனர். பேருந்து கொள்ளை கும்பல் தலைவன் மலைச்சாமி கைது செய்யப்பட்ட நிலையில், கூட்டாளிகளை போலீசார் தேடிவருகின்றனர். சில்லரையை தேடும் மனது, மொத்தமாக இழப்பது வேதனையின் உச்சம்.


Next Story

மேலும் செய்திகள்