செப்டம்பர் 2ம் தேதி மீண்டும் ஒரு முக்கிய நிகழ்வு நடைபெற உள்ளது - இஸ்ரோ தலைவர் சிவன்

சந்திரயான் -2 பயணத்தில் முக்கிய மைல்கல் இன்று எட்டப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
x
இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இதுவரை யாரும் கால் பதிக்காத நிலவின் தென்பகுதியில் தரையிறங்கும் நிகழ்வுக்கான முன்னோடியாக, சந்திரயான் - 2 விண்கலம், இன்று காலை பூமியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்து நிலவின் சுற்று வட்டப்பாதைக்கு சென்று சுற்றத் தொடங்கி உள்ளதாக தெரிவித்தார். இதற்கான பணிகள் இன்று காலை 9.02 மணிக்கு தொடங்கியதாகவும், சரியாக ஆயிரத்து 728 வினாடிகளில் அந்த பணிகள் நிறைவடைந்து, நிலவின் சுற்று வட்டப்பாதையில், சந்திரயான் - 2 விண்கலம் சுற்றத் தொடங்கி உள்ளதாகவும், இது வரலாற்று நிகழ்வு என்றும் சிவன் குறிப்பிட்டார். அடுத்து முக்கிய நிகழ்வு வரும் செப்டம்பர் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவித்த சிவன், அன்றைய தினம் விக்ரம் லேண்டர் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகும் என்றும், 3 ஆம் தேதி அதன் சுற்றுவட்டப் பாதையில் சிறிய மாற்றம் செய்யப்படும் என்றும், 3 வினாடிகள் நடைபெறும்  இந்த மாற்றம் லேண்டர் இயல்பாக செயல்படுவதை உறுதி செய்ய என்றும் சிவன் தெரிவித்தார். திட்டமிட்டப்படி வரும் 7 ஆம் தேதி நிலவின் தென் பகுதியில் கால்பதிக்கும் நிகழ்வன்று பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரோ  வர அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்