ஒற்றை தெருவிளக்கு...ஒரு ரூபாய் கட்டணம்... ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியை

தெருவிளக்கில் ஒரு ரூபாய் கட்டணத்தில் ஏழை மாணவர்களுக்கு கல்வி புகட்டி வரும் ஆசிரியையின் நெகிழ்ச்சி பயணம்.
x
திருச்சி, பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரியில் தேர்வுகள் அலுவலக பணியாளராக பணியாற்றி வருபவர் கோமதி. அரியமங்கலத்தில் உள்ள குடிசை பகுதியான சீனிவாச நகரில் கடந்த 16 ஆண்டுகளாக மாலை நேரங்களில் பயிற்சி வகுப்பு எடுத்து வருகிறார் இவர். சாலையில், ஒற்றை தெருவிளக்கின் வெளிச்சத்தில் கல்வி கற்று தரும் இவரது பயிற்சி வகுப்பில் இருந்து, இதுவரை சுமார் 4 ஆயிரம் மாணவர்கள் உருவாகியுள்ளனர். எல்.கே.ஜி. முதல் 12 ஆம் வகுப்பு வரை கிட்டத்தட்ட இந்த ஆண்டு மட்டும் 80 மாணவர்கள், கோமதி ஆசிரியை பயிற்சியில் கல்வி கற்று வருகின்றனர். வசதி வாய்ப்பில்லாத, தினக்கூலிகளாக இருக்கும் மக்கள் வசிக்கும் குடிசை பகுதியில், அரசு பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களிடம் ஒரு ரூபாய் மட்டுமே பெற்று கொண்டு பயிற்சி வகுப்பு எடுத்து கல்வி ஆர்வத்தை ஏற்படுத்தி வருகிறார் கோமதி..

ஆசிரியர் ஆக வேண்டும் என்ற தனது கனவு, குடும்ப சூழலால் நிறைவேறாத பொழுதும், இந்த வாய்ப்பு தமக்கு மனமகிழ்வை தருவதாகவும், நல்லாசிரியர் விருது பெற்ற அளவுக்கு மனநிம்மதி அடைந்திருப்பதாகவும் கூறுகிறார், கோமதி. ஆரம்பத்தில் என்.ஜி.ஓ. அமைப்பு ஒன்று நிதி கொடுத்து ஆதரவளித்த நிலையில், தற்போது நிதியை நிறுத்திவிட்டதாக தெரிவித்த கோமதி, பயிற்சி வகுப்பை நிறுத்த மனமில்லாமல் தொடர்வதாக தெரிவித்தார். மேலும், இலவசமாக கிடைக்கும் எந்தவொரு விஷயத்திற்கும் மதிப்பு கிடைப்பதில்லை என்பதாலே, மாணவர்களிடம் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டு பயிற்சி வகுப்பு எடுப்பதாகவும் கூறுகிறார், கோமதி. மழை போன்ற காலங்களில் சாலையில் வகுப்பு எடுப்பது சிரமமாக இருப்பதால், அரசு ஒரு இடம் ஒதுக்கி தர வேண்டும் என கோரிக்கை விடுக்கிறார் கோமதி. ஒரு ரூபாய் மட்டுமே பெற்று கொண்டு, ஒற்றை தெருவிளக்கு வெளிச்சத்தில் ஏழை குழந்தைகளின் எதிர்காலத்தை வளமாக்க  கோமதி எடுத்து வரும் முயற்சி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்